
மும்பை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிவித்த 2 டாக்டர்களுக்கு மும்பை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மும்பை தாதர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹோமியோபதி டாக்டர் சசய்யா டாடெட்(42) மற்றும் டாக்டர் சுபாங்கி அத்கர் (62). இவர்கள் தாதர் மற்றும் அவுரங்காபாத் பகுதியில் மகப்பேறு மருத்துவமனைகள் நடத்தி வருகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு பத்திரிகைகளில் சசய்யா டாடெட் விளம்பரம் வெளியிட்டார். அதில், தன்னை வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர் எனவும், ஆண் குழந்தை வேண்டும் என்றால் அணுகவும் என தனது முகவரியை அளித்திருந்தார். அதிகரித்து வரும் பெண் சிசுக் கொலைகளை தடுக்க அரசு சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்ற தகவலை மருத்துவர் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண் குழந்தை வேண்டுமா என வெளியான விளம்பரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் அவர்களுக்கு பாலின தேர்வு தடுப்புச் சட்டம் 2003ன் கீழ் அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித் தனர். இது போன்ற ஒரு குற்றத்துக்காக 2 மருத்துவர்கள் தண்டனை பெற்றுள்ளது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடதக்கது
Source: http://www.dinakaran.com
No comments:
Post a Comment