
லண்டன்: கடத்தப்பட்ட பிரிட்டிஷ் தம்பதியை விடுவிக்க, சோமாலியா கடற் கொள்ளையர்கள் ரூ.33 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த பால் (59) மற்றும் ராச்செல் சாண்ட்லர் (55) தம்பதி, கடந்த அக்டோபர் 22ம் தேதி சேசெலஸிலிருந்து தான்ஸானியாவுக்கு லின் ரைவல் என்ற படகில் புறப்பட்டனர். இது அடுத்த நாளே காணாமல் போனது. பின்னர் அவர்கள் சென்ற படகு மட்டும் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சோமாலியா கடற்கொள்ளையர்களால் இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், பிபிசியை தொடர்பு கொண்ட கடத்தல்காரன்,பால் தம்பதியை நாங்கள்தான் பிடித்து வைத்துள்ளோம். ரூ.33 கோடி கொடுத்தால் அவர்களை விட்டு விடுகிறோம். அப்படி இல்லாவிட்டால் அவர்களை கொன்று விடுவோம் என்று கூறியுள்ளான். ஆனால் இவர்களது கோரிக்கையை ஏற்க பிரிட்டிஷ் அதிகாரிகள் மறுத்துள்ளனர். பிணைய கைதிகளை விடுவிப்பதற்காக விடுக்கப்பட்ட கடற் கொள்ளையர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க முடியாது என பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சோமாலிய கடற்பகுதியான கல்ப் ஆப் ஆடன் வழியாக வரும் சரக்குக் கப்பல் மற்றும் படகுகளை கைப்பற்றி பணம் பறிப்பதை தொழிலாகவே கொண்டுள்ளனர் கொள்ளையர்கள். இவர்களின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டும் வகையில் நேட்டோ கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து படையினரிடமிருந்து தப்பிப்பதற்காக, தங்கள் பகுதியை விடுத்து, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் கடல் பகுதிகளுக்குச் சென்று கடத்தலில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிரடி படையினரின் கெடுபிடிகளா£ல் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கொள்ளையர்கள் அதை ஈடுகட்டுவதற்காக பணம் கேட்பதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் தம்பதி குடும்பத்தாரிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதை கொள்ளையர்களிடம் விளக்கி அவர்களை மீட்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என சோமாலியா பிரதமர் ஓமர் ஷர்மார்க் லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment