Friday, October 30, 2009

தரை இறங்க முடியாமல் நடுவானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம்


புதுடெல்லி: மும்பையில் இருந்து டெல்லிக்கு 143 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் நேற்று தரைஇறங்க முடியாமல் அரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்தது. பின்னர் அந்த விமானம் பத்திரமாக தரை இறங்கியது. மும்பையில் இருந்து நேற்று காலை ஏர் இந்தியாவின் ஏர்பஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 143 பயணிகளும், 7 ஊழியர்களும் இருந்தனர். மதியம் 12 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தை விமானம் நெருங்கியது. விமானம் தரைஇறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். தரை இறங்குவதற்காக தாழ்வாக விமானம் பறந்தபோது, விமானம் தரை இறங்க உதவும் கருவிகள் சரிவர இயங்காததை விமானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தரைஇறங்குவதை கடைசி நேரத்தில் கைவிட்ட விமானிகள் விமானத்தை மீண்டும் உயரத்தில் பறக்கச் செய்தனர். விமானம் தரைஇறங்காமல் திடீரென உயர பறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அரை மணிநேரத்துக்கு டெல்லி வான்பகுதியில் விமானம் வட்டமடித் தது. இதற்கிடையே விமான நிலையத்தில் உச்ச பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரைஇறங்கும் போது அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓடுபாதைக்கு அருகில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர். மதியம் 12.30 மணிக்கு விமானத்தை தரைஇறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த முறை கருவிகள் சரியாக இயங்கியதால் விமானம் பத்திரமாக தரைஇறங்கியது.

Source: http://www.dinakaran.com

No comments: