Friday, November 20, 2009

பிரசவத்திற்கு அனுமதிப்பதில் தாமதம்: அரசு ஆஸ்பத்திரி வாசலில் குழந்தை பெற்ற பெண்; செவிலியர்கள் மீது புகார்


தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் பிரசவத்திற்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், ராயப்பன்பட்டி, அணைப்பட்டி கோகிலாபுரம், ஆனை மலையன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

ஆனைமலையன் பட்டியை சேர்ந்த தங்க பாண்டி என்பவரது மனைவி ரெங்கம்மாள் (வயது 26) கர்ப்பிணி ஆன இவர் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக நேற்று காலை 8.30 மணிக்கு தனது தாயருடன் வந்துள்ளார். மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அங்கு பணியில் இருந்த நர்சு டாக்டர் வரட்டும் வந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாக காத்திருந்த ரங்கம்மாள் மருத்துவமனை வாசலில் நடந்து கொண்டு இருந்தார். மதியம் 2 மணியாகியும் டாக்டர் வரவில்லை.

இந்த நிலையில் வாசலில் நடந்து கொண்டிருந்த ரெங்கம்மாள் இடுப்பு வலியால் துடித்து மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுதார். தனது மகள் அழுகுரலை கேட்ட தாய் ஓடி வந்தார். மகளின் நிலை கண்டு தான் அணிந்து இருந்த சேலையை உருவி மறைத்துவைத்து மகளுக்கு தாயே பிரசவம் பார்த்தார். இதில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த தகவல் கேட்டு வந்த உறவினர்கள் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை என்று மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து கோம்பை வட்டார மருத்துவ அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனை அடுத்து குழந்தை பெற்ற தாய்க்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மகளுக்கு பிரசவம் பார்த்த தாய் நாகரத்தினம் கூறியதாவது, ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பாகும். காலை 8.30 மணிக்கு வந்த எங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் டாக்டர்கள் வரட்டும் என்று காலம் கடத்திவிட்டு எனது மகளுக்கு மருத்துவமனை வாசலில் பெற்ற தாயே பிரசவம் பார்க்கும் நிலை உள்ளது என்று கதறி அழுதார்.

இது தொடர்பாக கலெக்டர் உத்தரவின் பேரில்மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்லத்துரை மற்றும் உத்தமபாளையம் தாசில்தார் மனோகரன் ஆகியோர் இன்று விசாரணை நடத்துகிறார்கள்.

No comments: