Wednesday, November 11, 2009

எனது ஆட்கள் கையில் சிக்கி இருந்தால் ஆஸ்மியை வறுவல் போட்டுஇருப்பார்கள்


மும்பை: இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த ஆஸ்மி எனது ஆட்கள் கையில் கிடைத்திருந்தால் வறுவல் அல்லது தந்தூரி போட்டு இருப்பார்கள் என்று பால் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார். மகாராஷ்டிர சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் அபு அசிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேயின் கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான ÔசமனாÕவில் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பது வருமாறு: மகாராஷ்டிராவில் இருந்து பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் ஆஸ்மி, மராத்தியில் பதவி ஏற்பு உறுதி மொழி எடுக்காமல் இந்தியில் எடுத்து இருக்கிறார். அவரை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) கட்சியினர் தாக்கியிருக்கிறார்கள்.பேரவையில் நடந்த வன்முறைக்கு ஆஸ்மியே பொறுப்பு. மராத்தியின் கவுரவத்தில் பிறந்தது சேனா. கடந்த காலங்களில் இந்தி, ஆங்கிலத்துக்கு எதிராக சிவசேனை உறுப்பினர்கள் பேரவையில் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக மூத்த உறுப்பினர் திவாகர் ரட்டே போன்றவர்கள் ஆணித்தரமாக பேசியிருக்கிறார்கள். ஆஸ்மி போன்றவர்கள் அவர் கையில் கிடைத்திருந்தால் வறுவல் அல்லது தந்தூரி போட்டிருப்பார். மராத்தியின் பெருமையை காப்பதே சிவசேனையின் கொள்கை. இதில் எந்த மாற்றமும் இருக்காது. எனினும் சட்டப் பேரவைக்குள் எம்.என்.எஸ். உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டதை யாராலும் ஆதரிக்க முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளன. இந்த அவைகளின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். அவற்றை மல்யுத்த களமாகவோ, காய்கறி சந்தையாகவோ மாற்றிவிடக் கூடாது. இவ்வாறு பால் தாக்கரே எழுதியுள்ளார்.

No comments: