Tuesday, November 3, 2009

பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்க கோரி வழக்கு


சென்னை: சென்னையை சேர்ந்த வாணிஸ்ரீ ஞானேஸ்வரன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பதாவது: பாடப்புத்தகங்கள் கனமாக இருப்பதாலும், நோட்டு புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பையின் சுமை கூடியுள்ளது. மேலும், புத்தகப் பையில் லஞ்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ், தண்ணீர் பாட்டில், ஜாமின்ட்ரி பாக்ஸ் என்று பல்வேறு பொருட்களையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சிறுவர்களின் உடல் எடையில் 50 சதவீதம் அளவுக்கு அவர்கள் எடுத்து செல்லும் புத்தகப் பையின் எடை உள்ளது. இதனால், சிறுவயதிலேயே முதுகு வலி, கழுத்து வலி ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த அவஸ்தையை தினம், தினம் மாணவர்கள் அனுபவிக்கிறார்கள். பள்ளி நிர்வாகங்களும் அதிக பணத்தை வசூல் செய்வதற்காக தேவையற்ற நோட்டு, புத்தகங்களை வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் மன அளவிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, புத்தகப் பையின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புத்தகப் பையின் சுமையை குறைக்க புதிய திட்டம் வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்மனுவில் கூறியிருந்தார். மனுவை நீதிபதி பானுமதி, பால்வசந்தகுமார் ஆகியோர் நேற்று விசாரித்து, 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments: