Thursday, January 28, 2010

மாடியில் இருந்து மாணவர் வீசப்பட்டாரா? கல்லூரி நிர்வாகம் மறுப்பு “பணம் பறிக்கும் நோக்கில் புகார் செய்கிறார்”


கோவை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சோமன்பாபு தன்னை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்து மாடியில் இருந்து வீசியதாக புகார் கூறியுள்ளார். இதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கல்லூரி இணை செயலாளர் பிரியாவிடம் கேட்டபோது கூறியதாவது:-

மாணவர் சோமன் பாபு சம்பவம் நடந்ததாக கூறிய தேதியில் அவருடன் 7 மாணவர்கள் அறையில் தங்கி இருந்தனர். சோமன் பாபு பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளான். மற்ற மாணவர்கள் அசைன்மெண்ட் எழுதிக்கொண்டு இருந்துள்னர். சோமன்பாபு மாடியில் இருந்து கீழே விழுந்ததை தரையில் நின்ற முதலாம் ஆண்டு மாணவர் பார்த்துள்ளார்.அவர் சத்தம் போடவே மற்ற மாணவர்கள் விரைந்து வந்து கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்.

பின்னர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் சிகிச்சைக்கு ரூ. 1 லட்சம் வரை கேட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாக தரப்பில் பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து ரூ. 4 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டு மென்றே தற்போது புகார் கூறுகிறார்கள்.

கல்லூரியில் எந்தவித ராக்கிங்கும் நடைபெறவில்லை. மாணவர் சோமன்பாபு 6-வது மாடியில் இருந்துதான் விழுந்துள்ளார். ஆனால் 4-வது மாடியில் இருந்து தூக்கி வீசியதாக தவறாக கூறுகிறார்கள். கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ஏராளமானபேர் இருக்கும்போது இவரை மட்டும் ஏன் ராக்கிங் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் கூட்டுறவுபட்டியை சேர்ந்தவர் சோமன்பாபு (வயது19). இவர் கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்ந்து படித்து வந்தார். தீபாவளி விடுமுறையில் வீட்டுக்கு வந்த சோமன்பாபு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு சென்றபோது 4- வது மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார்.

சுயநினைவு இல்லாமல் மாணவர் சோமன்பாபு இருந்ததால் கல்லூரி நிர்வாகம் மாணவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசில் புகார் கொடுத்ததாக தெரிகிறது.

ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் சோமன்பாபு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். தண்டுவடத்தில் 3 இடங்களில் முறிவு இருந்தது. இதனால் டாக்டர்கள் ஆபரேசன் செய்தனர்.

மேலும் கடந்த சில வாரத்துக்கு முன்பு மாணவர் சோமன்பாபுக்கு நினைவு திரும்பியது. தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டதால் நடக்க முடியாத நிலையில் இருக்கும் சோமன்பாபு மதுரை விசுவநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்து மாணவர் சோமன்பாபு கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அவர் கூறியதாவது:-

நான் அரசு கோட்டாவில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்ந்தேன். கடந்த தீபாவளி பண்டிகையின்போது வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்றேன்.

சம்பவத்தன்று இரவு கல்லூரி விடுதியில் சாப்பிட்டுவிட்டு எனது அறை உள்ள 6-வது மாடிக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது இறுதி ஆண்டு மாணவர்கள் 4 பேர் என்னை வழி மறித்தனர்.

தீபாவளிக்கு ஊருக்கு சென்று வந்துள்ளாய் உன்னிடம் நிறைய பணம் இருக்கும். எனவே எங்களுக்கு பார்ட்டி கொடு என்றனர். அப்போது என்னிடம் பணம் இல்லை என்றேன். உடனே 4 பேரும் சேர்ந்து என்னை அடித்தனர். நான் அழுது கொண்டே எனது அறைக்கு சென்றேன். அப்போது எதிரே வந்த வார்டன் விசாரித்தார். அப்போது நடந்ததை சொன்னேன். அவரும் விடிந்ததும் விசாரித்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். நானும் தூங்கிவிட்டேன்.

இரவு 12 மணி அளவில் எனது அறை கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே கதவை திறந்து பார்த்தேன். அந்த 4 பேர் நின்று கொண்டிருந்தனர். கீழே வா என்று அழைத்தனர். நானும் அவர்களுடன் சென்றேன். 4-வது மாடிக்கு சென்றபோது என்னை அவர்கள் ஆபாசமாக பேசி தாக்கினர்.பின்னர் 4 பேரும் சேர்ந்து என்னை தூக்கி கீழே வீசி விட்டனர். உடனே நான் சுய நினைவு இழந்துவிட்டேன். இப்போதுதான் நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது தெரிகிறது.
எனக்கு வந்த நிலை மையை வேறு யாருக்கும் வரக்கூடாது. என்னை தூக்கி வீசிய 4 மாணவர்கள் பெயர் தெரியவில்லை. ஆனால் அடையாளம் காட்ட முடியும்.
எனது தண்டு வடம் 3 இடங்களில் முறிந்து விட்டதால் எனது வாழ்க்கையே கேள்விகுறியாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கவும், நிவாரணம் பெறவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு மாணவர் சோமன்பாபு கூறியதும் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. பெற்றோர்களும், உறவினர்களும் சோகமான முகத்துடன் படுத்த படுக்கையாய் இருக்கும் மாணவரை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: