Thursday, January 28, 2010

கரீனாகபூருக்கு பார்சலில் வந்த ரூ.5 லட்சம் நகைகள்: போலீசில் ஒப்படைத்தார்



இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கரீனாகபூர். ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க ஐஸ்வர்யாராயை விட அதிக தொகை பெறுகிறார். கரீனாவும், இந்தி நடிகர் சயீப்அலிகானும் தீவிரமாக காதலிக்கிறார்கள். விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது.

இந்தநிலையில் கரீனாகபூருக்கு தங்கம், வைர நகைகளுடன் மர்ம பார்சல் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள கரீனாகபூர் வீட்டு முகவரிக்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. பார்சல் வந்தபோது கரீனாகபூர் வீட்டில் இல்லை. படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று இருந்தார். அவரது உதவியாளர் பார்சலை வாங்கி பிரித்தார். உள்ளே ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் ஒன்றும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகை ஒன்றும் இருந்தது. அதற்குள் ஒரு கடிதமும் வைக்கப்பட்டு இருந்தது.

அக்கடிதத்தில், நான் உங்கள் தீவிர ரசிகன். துபாயில் இருந்து இந்த நகைகளை வாங்கி அனுப்பியுள்ளேன். அடுத்த படத்தில் இந்த நகைகளை அணிந்து நீங்கள் நடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி உடனடியாக கரீனாகபூரை தொடர்பு கொண்டு உதவியாளர் தகவல் தெரிவித்தார். நகை பார்சலை போலீசில் ஒப்படைத்துவிடும்படி கரீனாகபூர் தெரிவித்தார்.
இதையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன. நகைகளை அனுப்பியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: