Monday, February 1, 2010

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், காரா பிளாக்(ஜிம்பாப்வே) ஜோடி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.


இதன் மூலம் தனது 11வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற பயஸ், சக வீரர் பூபதியின் சாதனையை சமன் செய்தார். ஆண்கள் ஒற்றையரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், கோப்பை வென்றார்.ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்தது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ரஷ்யாவின் எகாடரினா, செக் குடியரசின் ஜராஸ்லோவ் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை பயஸ் ஜோடி 7-5 என கைப்பற்றியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பயஸ் ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என மிகச் சுலபமாக தன்வசப்படுத்தியது. இறுதியில் பயஸ்-காரா பிளாக் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.சாதனை சமன்:இதன்மூலம் பயஸ்-காரா பிளாக் ஜோடி, முதன்முறையாக ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையரில் பயஸ், இரண்டாவது முறையாக கோப்பை வென்றார். முன்னதாக கடந்த 2003ல் பயஸ், அமெரிக்காவின் மார்டினா நவரத்திலோவாவுடன் இணைந்து பட்டம் வென்றார். இது பயஸ் வென்ற, 11வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் (இரட்டையர்-6, கலப்பு இரட்டையர்-5). இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இந்தியர்கள் வரிசையில், சகவீரர் மகேஷ் பூபதியின் (இரட்டையர்-4, கலப்பு இரட்டையர்-7) சாதனையை சமன் செய்தார்.வெற்றி குறித்து பயஸ் கூறுகையில், ""ஆஸ்திரேலியன் ஓபனில் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடரில் சாதிக்க, முழு ஆதரவு கொடுத்த இந்திய ரசிகர்களுக்கும், இங்கு போட்டியை காண வந்த ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியில் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்த காரா பிளாக்கிற்கும், நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்,'' என்றார்.

No comments: