
நடிகை நயன்தாரா தினத்தந்தி நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நயன்தாரா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சமீபத்தில், `ஆதவன்' (தமிழ்), `பாடிகாட்' (மலையாளம்), `அதூஸ்' (தெலுங்கு) ஆகிய 3 மொழிகளிலும் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்:- ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படத்தில் நடித்து அந்த படம் ஓடவில்லை என்றால் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். படம் வெற்றிகரமாக ஓடினால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. 4 1/2 வருடங்கள் கழித்து `பாடிகாட்' என்ற மலையாள படத்தில் நடித்தேன். நல்ல கதை. அந்த படம் வெற்றி அடைந்தது. அதைபோல் `ஆதவன்' படமும் சிறந்த கதை அம்சம் உள்ள படம்.
நான் முதல் முதலாக விநாயக் டைரக்ஷனில் `லட்சுமி' என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. அதே விநாயக் இயக்கத்தில் மீண்டும் நடித்த `அதூஸ்` படமும் வெற்றி அடைந்து இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
கேள்வி:- அடுத்து ஒப்புக்கொண்டுள்ள புதிய படங்கள் பற்றி?
பதில்: இப்போது தமிழில் `பாஸ் என்ற பாஸ்கரன்' என்ற படத்தில் ஆரியாவுடன் ஜோடியாக நடித்து கொண்டு இருக்கிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் ,மலையாளத்தில் ஷியாம் பிரசாத் இயக்கத்திலும், கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாகவும் நடித்து கொண்டு இருக்கிறேன்.
கேள்வி:- உங்களுக்கு கன்னடம் தெரியுமா?
பதில்:- நான் பெங்களூரில் பிறந்தவள் என்றாலும் கன்னடம் பேச தெரியாது. மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்வேன்.
கேள்வி:- திரையுலகில் உங்கள் லட்சியம் நிறைவேறி விட்டதா?
பதில்:- நான் 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி திரையுலகத்திற்கு வந்தேன். பொதுவாக சினிமாவுக்கு வருபவர்கள் பெயரும், புகழும் பெற வேண்டும். பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் நான் சினிமாவுக்கு வரும் போது எனக்கு எந்த வித ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்து விட்டு போய் விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வந்த பின் சினிமாவுடன் ஐக்கியமாகி விட்டேன். நான் எதிர்பார்த்திராத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்தது. சினிமாவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். குறிப்பிட்டு சொல்லும் படி எந்த லட்சியமும் இல்லை. நல்ல படங்கள் அமைய வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும். அது தான் என் ஆசை.
கேள்வி:- வாழ்க்கை எப்படி போய்க் கொண்டு இருக்கிறது?
பதில்:- நல்லபடியாக போய்க் கொண்டு இருக்கிறது.
கேள்வி:- மீனா, ரம்பா, நவ்யாநாயர் என உங்கள் சக நடிகைகள் திருமணம் செய்து கொண்டார்கள். உங்கள் திருமணம் எப்போது?
பதில்:- என் திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் நடக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும் அல்லவா?
கேள்வி:- உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா? பெற்றோர்கள் அனுமதியுடன் நடைபெறும் திருமணமாக இருக்குமா?
பதில்:- தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி. என் திருமணம் அம்மா-அப்பா அனுமதியுடன் தான் நடைபெறும். யாருடன் நடக்கும் என்பது தெரியாது.
கேள்வி:- பிரபுதேவாவுடன் உங்களை இணைத்து வரும் செய்திகளுக்கு, உங்கள் பதில் என்ன?
பதில்:- நோ கமெண்ட்ஸ் (பதில் சொல்ல விரும்பவில்லை).
கேள்வி:- சமீபகாலமாக மூக்குத்தி அணிந்து கொள்கிறீர்களே? என்ன விஷயம்?
பதில்:- மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அணிந்து கொண்டேன். வேறு ஏதுவும் இல்லை.
கேள்வி:- அடுத்து எந்த கதாநாயகனுடன் ஜோடி சேர ஆசைப்படுகிறீர்கள்?
பதில்:- இவரோடு தான் நடிக்க வேண்டும்... அவருடன் தான் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட மாட்டேன். யாருடன் நடித்தாலும் சந்தோஷம் தான். கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு இன்னும் வரவில்லை, அப்படி வந்தால் நிச்சயமாக நடிப்பேன்.
கேள்வி:- வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பிரபுதேவாவுடன், நீங்கள் நடனம் ஆடப்போவதாக பேச்சு அடிப்படுகிறதே?
பதில்:- முதல்-அமைச்சருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நான் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வேன். ஆனால் நடனம் ஆடுவது பற்றி முடிவு செய்யவில்லை.
கேள்வி:- அடுத்த 20 வருடங்கள் கழித்து நயன்தாரா எப்படி இருப்பார்?
பதில்:- அது கடவுளுக்கு தான் தெரியும். அப்போது என்ன சூழ்நிலை? எப்படி இருப்பேன்? என்ன நடக்கும் என்று தெரிவதற்கு நான் கடவுள் அல்ல. சாதாரண மனுஷி.
கேள்வி:- உங்கள் அம்மா-அப்பா, அண்ணன் சந்தோஷமாக இருக்கிறார்களா?
பதில்:- எங்க அம்மா-அப்பாவை நான் சந்தோஷமாக வைத்து இருக்கிறேன். அண்ணன் துபாயில் இருக்கிறார். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை போனில் பேசிக்கொள்கிறோம். எந்த விஷயமாக இருந்தாலும் சரி அண்ணாவுடன் கலந்து பேசுகிறேன். நீ அப்படி இருக்க வேண்டும்... இப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா எனக்கு அறிவுரை சொல்வதில்லை. அதே போல் நானும் அவருக்கு அறிவுரை சொல்வதில்லை.
No comments:
Post a Comment