Monday, February 1, 2010

பூகம்பம் ஏற்பட்ட ஹைதி தீவில் இருந்து குழந்தைகள் கடத்தல்


அமெரிக்கா அருகேயுள்ள ஹைதி தீவில் கடந்த 12-ந்தேதி கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. அதில், 2 லட்சம் பேர் பலியானார்கள். எனவே, பெரும்பாலான குழந்தைகள் தாய், தந்தையை இழந்து அனாதைகளாகிவிட்டனர்.

மேலும், அங்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். பசி, பட்டினியால் வாடுகின்றனர். எனவே, இங்கு கொள்ளை சம்பவங் கள் நடைபெற்று வருகின்றன.

பெற்றோரை இழந்து, அனாதைகளாகி ஆதரிக்க யாரும் இன்றி தவிக்கும் குழந்தைகளை கடத்தும் கும்பலும் நடமாடி வருகிறது. இந்த நிலையில் பூகம்பம் பாதித்த போர்ட்- ஆப்- பிரின்ஸ் நகரில் இருந்து 33 அனாதை குழந்தைகளை அமெரிக்காவை சேர்ந்த ஒரு கும்பல் கடத்தி சென்றது.

இதை அறிந்த ஹைதி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் டோமினிக்கன் குடியரசு எல்லை வழியாக குழந்தைகளை கடத்த இருப்பது தெரியவந்தது.

உடனே அங்கு சென்று குழந்தைகளை கடத்த முயன்ற அமெரிக்கர்கள் 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீ சார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் தாங்கள் அமெரிக்காவில் இடாகோ பகுதியில் உள்ள “பாபிஸ்ட் சர்ச்” உறுப்பினர்கள் என்று தெரிவித்தனர். ஹைதியில் அனாதைகளாக இருக்கும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதற்காக அழைத்து செல்வதாக கூறினர்.

ஆனால் அவர்களிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. எனவே கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டர். ஹைதியின் தகவல் தொடர்பு மந்திரி மரி- லாரன்ஸ் ஜேர்ஸின், அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிறைக்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

No comments: