Wednesday, August 4, 2010

மேல்-சபை எம்.பி. தேர்தல் ஓட்டுப்போட பணம் கேட்டதில் தவறு இல்லை; ஜார்கண்ட் எம்.எல்.ஏ. சொல்கிறார்


ஜார்கண்ட் மாநிலத்தில் டெல்லி மேல்-சபைக்கு 2 எம்.பி.க்கள் தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு அவர்களை தேர்வு செய்தனர்.

எம்எல்.ஏ.க்கள் கட்சி கட்டளைப்படிதான் ஓட்டு போடுவார்களா? அல்லது பணம் வாங்கி கொண்டு வேறு வேட்பாளருக்கு ஒட்டு போடுவார்களா? என கண்டறிய சி.என்.என்.-ஐ.பி.என். டி.வி. நிறுவனம் அதிரடி வேட்டை ஒன்றில் ஈடுபட்டது.

நிருபர்களை புரோக்கர்கள் போல அனுப்பி பல எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வைத்தனர். தொழில் அதிபர் ஒருவருக்கு ஓட்டு போட்டால் பணம் தருவதாக அவர்கள் கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட எம்.எம்.ஏ.க்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் என்று பேரம் பேசினார்கள்.

இந்த உரையாடல்கள் அனைத்தையும் ரகசிய வீடியோ மூலம் பதிவு செய்த அவர்கள் டி.வி.யில் ஒளிபரப்பு செய்தனர். அதில் காங்கிரஸ், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா, பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிக்கினார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பி உள்ளது. கட்சி மேலிடங்களும் நோட்டீசு அனுப்பி உள்ளன.

இதில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ, ராஜேஷ், ராஞ்சியில் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

மேல்-சபை எம்.பி. தேர்தலில் ஓட்டுப்போட பணம் கேட்டது உண்மைதான். இது எனது தனிப்பட்ட விஷயம். இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

நான் பணம் கேட்டேனே தவிர பணம் வாங்கவில்லை. எனவே இதில் குற்றம் நடக்கவில்லை. இதனால் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

தனிப்பட்ட முறையில் நாங்கள் பலவிஷயங்களை பலரிடம் பேசலாம். அதைப்போலத்தான் இதிலும் பேசி இருக்கிறோம். யாரோ சதித்திட்டம் செய்து எங்களை சிக்க வைத்து இருக்கிறார்கள்.

நாங்கள் தவறு செய்து இருந்தால் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் பணம் எதுவும் வாங்கவில்லை. நாங்கள் பணம் வாங்கியதற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: