Wednesday, August 11, 2010

சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் சென்று கொள்ளையர்களிடம் இருந்து கணவரை மீட்ட வீரப்பெண்

சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் சென்று    கொள்ளையர்களிடம் இருந்து    கணவரை மீட்ட வீரப்பெண்உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் அஜித்சிங். கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 6-ந்தேதி ஆக்ரா சென்று விட்டு திரும்பியபோது சம்பல் பள்ளத்தாக்கில் செயல்படும் பீமா தலைமையிலான கொள்ளை கும்பல் அவரை கடத்தி சென்றது. பின்னர் அவர்கள் அஜீத்சிங்கை முக்கியா என்ற கொள்ளை கும்பலிடம் கொடுத்து விட்டனர்.
 
அவர்கள் அஜீத்சிங்கை சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் கொண்டு சென்றனர்.
 
பின்னர் அவருடைய மனைவி சாவித்திரிக்கு போன் செய்து உங்கள் கணவரை விடுவிக்க வேண்டு மானால் குறிப்பிட்ட பணம் வேண்டும். இல்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.
 
சாவித்திரி கொள்ளையர் களிடம் எங்கள் வீட்டில் பெரும் கஷ்டத்தில் இருக்கிறோம். இவ்வளவு பணம் தர முடியாது என்று கூறினார். அதை அவர்கள் ஏற்க வில்லை.
 
கணவரை எப்படியாவது மீட்க வேண்டும் என்று சாவித்திரி துடித்தார். போலீசுக்கு சொன்னால் கணவர் உயிருக்கு ஆபத்து என்று கருதிய சாவித்திரி தனி ஆளாக கொள்ளையனிடம் சென்று கணவரை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
 
இதற்காக வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு அவர் கொள்ளையர்களை சந்திக்க புறப்பட்டு சென்றார். அவர் வைத்திருந்த நகை, பணத்தின் மதிப்பு கொள்ளையர்கள் கேட்ட தொகையை விட மிக குறைவு, லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே அதன் மதிப்பு இருந்தது.
 
இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தனி ஆளாக காட்டுக்குள் சென்றார். கொள்ளையர்களுடன் தொடர்பு கொள்வதற்காக செல்போன் மட்டும் வைத்திருந்தார்.
 
8 மணி நேரம் காட்டுக்குள் நடந்து சென்று கொள்ளையர்கள் இருந்த இடத்தை அடைந்தார்.
 
தான் கொண்டு சென்ற பணம்-நகைகளை கொள்ளையர்களிடம் கொடுத்து விட்டு கணவரை விடுவிக்குமாறு கேட்டார். எங்கள் வீட்டில் இவ்வளவு தான் பணம் இருக்கிறது. நீங்கள் கேட்ட அளவு பணம் தர வேறு வழியே இல்லை என்று குடும்ப கஷ்டத்தையும் கூறினார்.
 
அவர் கூறியது கொள்ளையர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பெண் இவ்வளவு தூரம் காட்டுக்குள் கஷ்டப்பட்டு வந்து இருக்கிறாரே? என்று பரிதாபப்பட்டனர்.
 
எனவே கொள்ளையர்கள் சாவித்திரி கொடுத்த பணம்-நகை அனைத்தையும் அவரிடமே திருப்பி கொடுத்தனர். கணவரையும் விடுவித்தனர். அது மட்டும் அல்ல செலவுக்காக ரூ.5100-ஐ சாவித்திரியிடம் கொடுத்தனர்.
 
பின்னர் கொள்ளையர்கள் அனைவரும் சாவித்திரி காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டு கொண்டனர்.
 
சாவித்திரி கணவரை பத்திரமாக மீட்டு கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

No comments: