Wednesday, August 11, 2010

தனியார் ஆஸ்பத்திரி, அரசு பொதுமருத்துவமனை மீது பரபரப்பு புகார்: சென்னையில் தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் ஏழை பெண்

தனியார் ஆஸ்பத்திரி, அரசு பொதுமருத்துவமனை மீது பரபரப்பு புகார்: சென்னையில் தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் ஏழை பெண்சென்னையில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையாலும், அரசு பொது மருத்துவமனையின் மெத்தன போக்காலும் ஏழை இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார்.
 
அவர் பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பரிதாப நிலையில் உள்ளார்.
 
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் ராம்நாத் (வயது 30), டெய்லர் தொழில் செய்கிறார். இவரது மனைவி குணசுந்தரி (21). இவர்களுக்கு 2 மாத ஆண் கைக்குழந்தை உள்ளது. குணசுந்தரி கடந்த மாத இறுதியில் காய்ச்சல், இருமல், சளித்தொல்லையால் அவதிப்பட்டார். இதற்காக நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றார்.
 
பின்னர் அங்கு பணிபுரியும் டாக்டர்கள் எழுதி கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார். அந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு குணசுந்தரிக்கு வியாதி அதிகமாகிவிட்டது. அவரது உடல் முழுவதும் சிறிய, சிறிய கொப்புளங்கள் உண்டாகியது. உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதுபோல புண்களாகிவிட்டன. இதனால் அவரது முகம் கோரமாக மாறியது. கண்பார்வையும் மங்கிவிட்டது.
 
பின்னர் குணசுந்தரியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே சாப்பிட்ட மருந்து, மாத்திரையினால் ஏற்பட்ட அலர்ஜி (டிரக் அலர்ஜி) காரணமாக இவ்வாறு உடல் முழுக்க கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும் என்றும் தெரிவித்தனர்.
 
உடனே குணசுந்தரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெறுகிறார்.
 
இந்த நிலையில், தவறான சிகிச்சை கொடுத்த தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து குணசுந்தரியின் கணவர் நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார்.
 
ஆனால், சம்பவம் நடந்தது நங்கநல்லூர் என்பதால் புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கும்படி கமிஷனர் அலுவலக போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். ஆனால் ஏற்கனவே பழவந்தாங்கல் போலீசில் புகார் கொடுத்து பார்த்தோம், சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
 
எனவே, தான் இங்கு புகார் கொடுக்க வந்தேன் என்று குணசுந்தரியின் கணவர் கூறினார். மறுநாள் வரும்படி போலீசார் தெரிவித்தனர். இதன்படி நேற்று குணசுந்தரியின் கணவர் ராம்நாத், தனது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50 பேருடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.
 
குணசுந்தரிக்கு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சை காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசு பொது மருத்துவமனையிலும் குணசுந்தரிக்கு அவ்வளவு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது கண்பார்வை மங்கிக்கொண்டே போகிறது. கண் டாக்டர் ஒருவரை வரவழைத்து சிகிச்சை அளிப்பதாக 3 நாட்களாக சொல்லுகிறார்கள். கண் டாக்டர் வந்தபாடில்லை.
 
உடல் முழுக்க புண்ணாக இருப்பதால் குணசுந்தரியால் அவரது கைக்குழந்தைக்குக்கூட தாய்ப்பால் கொடுக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளார். எனவே இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு குணசுந்தரிக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை காணவேண்டும் என்று பொதுமக்கள் பரபரப்பாக பேட்டி கொடுத்தனர்.

No comments: