
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தது. நேற்று மதியம் ஜெட்ப்ளூ விமானம் தரையிறங்கியது. அதன் வாசலை நோக்கி விமானம் மெதுவாக ஓடியது. அனுமதியின்றி ஒரு பயணி எழுந்தார். தலைக்குமேல் கம்பார்ட்மென்டை திறந்து லக்கேஜை இழுத்தார். ஊழியர் ஸ்லேட்டர் (38) ஓடி வந்தார். விமானம் ஓடுவதால் உட்காருமாறு கூறினார்.
கேட்கவில்லை பயணி. அவர் இழுத்த லக்கேஜ், ஸ்லேட்டரின் தலையில் மோதியது. ‘சாரி’ கேட்கும்படி கூறினார் ஸ்லேட்டர். மறுத்தார் பயணி. தவறு செய்ததுடன் ‘சாரி’ கூட சொல்லாத பயணியால் வெறுத்தார் ஊழியர். அறிவிப்பு செய்யும் மைக்கை பிடித்தார். பயணியின் நடத்தை பற்றி ஆவேசமாக பேசினார். ‘‘இதுபோன்ற பயணிகளுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. 20 ஆண்டு சர்வீஸ் போதும். குட் பை’’ என்று கூறினார்.
விமானம் நின்ற விநாடியில் அவசரகால கதவை திறந்தார். போகும் வழியில் பெட்டியில் இருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தார் ஊழியர் ஸ்லேட்டர். அவசர வழி, வழியாக சறுக்கியபடி விமானத்தில் இருந்து இறங்கியவர், பார்க்கிங் பகுதிக்கு விரைந்து பைக்கை கிளப்பி வீடு போய் சேர்ந்தார். பயணிகள் திகைத்தனர். தவறு செய்த பயணியை முறைத்தனர்.பைலட் மூலமாக ஜெட்ப்ளூ விமான நிறுவனத்துக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து போலீசுக்கு புகார் போனது. பயணிகள் இறங்கும் முன் அவசரகால கதவை திறந்து ஊழியர் வெளியேறியது சேவை குறைபாடு. கதவை திறக்கும்போது கீழே யாராவது இருந்திருந்தால் இறந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்பு அலட்சியம் என பல பிரிவுகளில் வழக்குகள் தயாராகின.
வீடு வந்து சேர்ந்திருந்த ஸ்லேட்டரை, காலிங் பெல் அடித்து அழைத்தது போலீஸ். புன்னகையுடன் வெளியே வந்தார் அவர். ‘என் அம்மா, அப்பா இருவருமே விமான பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அப்போதெல்லாம் பயணிகள் இப்படி இல்லை. இப்போது எல்லாமே மாறிப் போச்சு’ என்று கூறியபடி போலீசுடன் நடந்தார்.
விசாரணை தொடர்வதால் பெயர் கூற விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயணிகள், ஊழியர்கள் இடையே சுமுக உறவு குறைந்து வருகிறது வருத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாததுமே காரணம்’’ என்றார்.
பாதுகாப்பு விதிகளை பயணிகள் மதித்து நடப்பதில்லை என்பது விமான நிறுவனங்கள் தரப்பு குற்றச்சாட்டு. ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடப்பதாக இதற்கு பயணிகள் தரும் பதிலடி. சில வாரங்கள் முன்புதான் முதல் வகுப்பு பயணிகளின் பர்ஸ்களை திருடியதாக ஏர் பிரான்ஸ் ஊழியர் கைதானார். விமானத்தில் தனது கிடாரை ஊழியர்கள் உடைத்ததாக யூட்யூப் இணைய தளத்தில் கனடா நாட்டு பாடகி வீடியோ வெளியிட்டார். கிடாரை விடாமல் விமானத்தில் வாசித்து தொல்லை கொடுத்ததாக விமான நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதுபோன்ற பல ‘பறக்கும் அனுபவங்களை’ ப்ளாகுகளில் பலர் கொட்டியுள்ளது சுவாரசியமானது.
No comments:
Post a Comment