
பிரிட்டனில் பறவைகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், ஆப்ரிக்க பழுப்பு நிற கிளி, பார்வையாளர்களை பார்த்து கெட்ட வார்த்தைச் சொல்லி வருவதால், அதிகாரிகள் தர்மசங்கடமான நிலையில் தவித்து வருகின்றனர். ஆப்ரிக்க பழுப்பு நிற கிளிகள், 50 ஆண்டுகளுக்கு அதிகமாக உயிர்வாழக் கூடியவை. இவை, சொல்லிக் கொடுப் பதை அப்படியே கற்றுக் கொண்டு, திரும்பச் சொல்லும் திறன் கொண்டவை. ஆறு வயது சிறுவனுக்குரிய மூளைத் திறன் கொண்டவை. இதை வளர்த்து வந்தவர், தனது பணிப் பளு காரணமாக, அதை பராமரிக்க முடியாமல், டார்லிங்டனில் உள்ள சவுத் பார்க் பேர்டு ஹவுஸ் என்ற பறவைகள் காட்சியகத்துக்கு கொடுத்துவிட்டார். இந்த கிளி, மொபைல் போன்களின் ரிங் டோன்களை மிக அழகாக சொல்கிறது. காரின் அலாரம் சத்தங்களையும் ஒலித்துக் காட்டுகிறது. அதே நேரம், பார்வையாளர்களை பார்த்து கெட்ட வார்த்தையால், அசிங்கமாக திட்டுகிறது. "இந்த கெட்ட வார்த்தைகளை, பூங்காவுக்கு வந்த பள்ளிச் சிறுவர்கள் தான் கற்றுத் தந்திருக்க வேண்டும்' என்று அதிகாரிகள் சொல்கின்றனர். அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளி, மிகவும் புத்திசாலி. எந்த வார்த்தை கற்றுக் கொடுத்தாலும், எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டதாக உள்ளது. பார்வையாளர்கள் கற்றுக் கொடுப்பதையும், கெட்டியாக பிடித்துக் கொள்கிறது. இப்படி யாரோ கற்றுக்கொடுத்த சில கெட்ட வார்த்தைகளை, திடீரென்று பார்வையாளர்களை பார்த்து சொல்லும் போது எங்களுக்கு, "திக்' என்றாகிவிடும். சில சமயம், பார்வையாளர்களை பார்த்து, "ஹலோ' என்றோ, "பை' என்றோ சொல்லும். ஆனால், அடிக்கடி கெட்ட வார்த்தை சொல்வது தான் பிரச்னையாகிறது. குறிப்பாக, தன்னை கவனிக்காமல் செல்வோரை கெட்ட வார்த்தையால் இது திட்டுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment