
மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளது. காலை வர்த்தகம் துவங்கி சில நிமிடங்கள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் பின்னர் குறைய துவங்கியது.மதியத்திற்கு மேல் அதிக அளவில் விற்பனை நடந்ததால் சென்செக்ஸ் மளமளவென்று வீழ துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 606.14 புள்ளிகள் குறைந்து 9,975.35 புள்ளிகளில் முடிந்தது.கடந்த 2006 ஜூலைக்குப்பின் இப்போதுதான் சென்செக்ஸ் இந்த அளவுக்கு வீழ்ச்சியை கண்டிருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 194.95 புள்ளிகள் குறைந்து 3,074.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டியும் 2006 ஜூலைக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு குறைந்திருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தை அடுத்து காலை வர்த்தகத்தின் போது 205 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், பின்னர் நடந்த அதிக அளவிலான விற்பனையால் விழ துவங்கியது.இன்று அதிகம் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி எர்டெல், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பெல், என்,டி.பி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃராஸ்டெக்சர், டிசிஎஸ் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள்தான். இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 5.8 சதவீதமும் நிப்டி 6 சதவீதமும் குறைந்திருக்கிறது. முன்பு 10,000 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 21,207 புள்ளிகள் வரை உயர்வதற்கு, அதற்கு 384 வர்த்தக நாட்கள் தேவைப்பட்டிருந்தது. ஆனால் 21,207 புள்ளிகளில் இருந்து 10,000 புள்ளிகளாக குறைந்ததற்கு அதற்கு 192 வர்த்தக நாட்கள் மட்டும் போதுமானதாக இருந்திருக்கிறது. 21 ஆயிரம் புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளாக குறைந்ததற்கு அதிகம் காரணமாக இருந்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம், ஐசிஐசிஐ பேங்க்கும்தான். இந்த இரு நிறுவனங்களால் மட்டுமே சென்செக்ஸ் 30 சதவீதம் குறைந்திருக்கிறது.அதற்கு அடுத்தாற்போல் அதிகம் வீழ்ச்சி அடைந்திருந்தது எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி.,தான்.
No comments:
Post a Comment