Tuesday, October 28, 2008

தீபாவளியன்று ரூ_100 கோடி சரக்கு விற்பனை 'டாஸ்மாக்' சாதனை


தமிழக டாஸ்மாக் கடைகளில் தீபாவளியன்று சரக்கு விற்பனை இரு மடங்கு அதிகரித்தது. தீபாவளி தினத்தன்று மட்டும் "டாஸ்மாக்'கில் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள 6,700 டாஸ்மாக்
கடைகளில் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் "சரக்கு' விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.இதன் மூலம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.


அரசு தீவிர முயற்சி: சாதாரண நாட்களை விட பொங்கல், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் விற்பனை இரு மடங்கு அதிகரித்து வந்துள்ளது. விழாக்களில் புத்தாடை, பலகாரம் போன்றவையோடு மதுபான விருந்தையும் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறியிருப்பதே இதற்கு காரணம்."டாஸ்மாக்' மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைக் கொண்டே அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக "டாஸ்மாக்' விற்பனையை அதிகரிக்க, அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. மாவட்ட வாரியாக சரக்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து, மாதந்தோறும் விற்பனையை பெருக்கி வருகிறது.கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, சாதனை அளவாக, ஒரே நாளில் 60 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்தது.


"டாஸ்மாக்' நிர்வாகம் முழுமூச்சில் : சாதாரண நாட்களில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை விட, இரு மடங்கு மதுபான வகைகளும், மூன்று மடங்கு பீர் வகைகளும் விற்பனையாகின. சென்னையில் மட்டும் நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி, குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கு கிடைக்க "டாஸ்மாக்' நிர்வாகம் முழுமூச்சில் இறங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் கூடுதலாக சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் டாஸ்மாக் கிடங்குகள் திறந்து வைக்கப்பட்டு, சரக்கு டெலிவரி செய்யப்பட்டது.


ரம், பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஒயின் :
தீபாவளியன்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டனர். தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாளையொட்டி பாவளி
வந்ததால், இரு நாட்களிலும் விற்பனை களை கட்டியது.சாதாரண நாட்களில் ரம், பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஒயின் உள்ளிட்ட அயல்நாட்டு மது வகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள் வரை நாள் ஒன்றுக்கு விற்பனையாகி வந்தது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களிலுமே இந்த விற்பனை இரு மடங்கானது


இதன்படி, இரு நாட்களிலும் சேர்த்து நான்கு லட்சம் பெட்டிகள் அயல்நாட்டு மது விற்பனையாகி, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. இது, தீபாவளியன்றும், முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமையும் தலா 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.சென்னையில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் இரண்டு நாட்களிலும் எட்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சாதாரண நாட்களில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனை நடந்து வந்தது. இது தீபாவளியன்று மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது.


சரக்குகள் விலை அதிகரிப்பு: கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி மதுபானங்கள் விலை ஏற்றப்பட்டது. அப்போது குவாட்டருக்கு நான்கு ரூபாய் என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட்டது. விலையேற்றம் செய்யப்பட்டு 10 மாதங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் மறைமுகமாக விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதால் குடிமகன்கள் திர்ச்சியடைந்துள்ளனர்.வழக்கமாக விற்பனையாகும் சரக்குகளின் பெயரில் கூடுதலாக "டீலக்ஸ்' என்ற லேபிள் சேர்க்கப்பட்டு, விலை ஏற்றப்பட்டுள்ளது. பழைய பெயரில் உள்ள சரக்குகள் "சப்ளை' நிறுத்தப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்ட மது வகைகள் மட்டுமே
"டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.


குடிமகன்கள் அதிருப்தி : உதாரணமாக, "சிவாஸ் டிஸ்டல்லரீஸ்' தயாரிப்பு மதுவகையான மானிட்டர் பிராந்தி ஒரு குவாட்டர் விலை 57 ரூபாயாக இருந்தது. தற்போது "டீலக்ஸ் மானிட்டர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 59 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், 115 ரூபாய்க்கு விற்று வந்த மானிட்டர் "ஆப்' தற்போது டீலக்ஸ் என்ற பெயரில் 120 ரூபாய்க்கு
விற்பனை செய்யப்படுகிறது. "மானிட்டர் விஸ்கி' ரகமும் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற கம்பெனிகளும் பழைய மது ரகங்களின் சப்ளையை படிப்படியாக நிறுத்தி வருகின்றன.இவ்வாறு பழைய மது ரகங்களை நிறுத்திவிட்டு, பழைய பெயருடன் "டீலக்ஸ்' என்று சேர்த்து, விலையை அதிகரித்து விற்கும் தந்திரத்தை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு, குவாட்டருக்கு இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை திடீர் என விலை
அதிகரிக்கப்பட்டுள்ளது.


மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி, மது வகை விலையை அதிகரிக்க வேண்டும் என மதுபான உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அரசு அனுமதிக்காததால் இந்தப் பெயர் மாற்றத் தந்திரம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது."டாஸ்மாக்' நிர்வாகம் இப்படி நூதனமாக விலையை உயர்த்தியுள்ளதால் குடிமகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

No comments: