
புதுடில்லி: பணக்காரர்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கின்றனர்; ஏழைகள் முன்னதாகவே இறக்கின்றனர். பணக்காரர்கள் - ஏழைகள் இறப்பு இடைவெளி 40 ஆண்டுகள்! - உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. பல நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில் தெரியவந்த தகவல்கள்: ஜப்பானியர் தான் அதிக ஆண்டுகள் வாழ்கின்றனர்; இவர்களின் சராசரி அதிகபட்ச ஆயுள் 81 ஆண்டு ஆறு மாதம். மிகவும் குறைவான ஆண்டுகள் வாழ்பவர்கள் ஜாம்பியா மக்கள். இவர்களின் சராசரி வாழ்நாள் 32 ஆண்டுகள் எட்டு மாதங்கள். உலக நாடுகளில் நடத்தப் பட்ட சர்வேயின் அடிப்படையில் பார்த்தால், சர்வதேச அளவில் மக்களின் சராசரி வாழ்நாள் 67 ஆண்டுகள். இந்தியாவில், இந்த சராசரி வாழ்நாள் 63 ஆண்டு. ஆண்களுக்கு சராசரி வாழ்நாள் 62; பெண்களுக்கு 64 ஆண்டு.
ஏழை மக்களுக்கு அரசு சுகாதார செலவுகளை செய்வதில் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. ஒருவருக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 800 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஏழை நாடுகளில் உள்ள நிலை இது. அதுவே, பணக்கார நாடுகளில் அதிகபட்சமாக ஒருவருக்கு செலவிடப்படும் ஆண்டு தொகை மூன்று லட்சம் ரூபாய். ஆனால், இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், பணக்கார நாடுகளிலும் ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் சுகாதார செலவு குறைந்துவருகிறது. அரசு உதவி பெறாமல், தாங்களாகவே சுகாதார செலவுகளை செய்யும் ஏழை, நடுத்தர மக்களின் எண்ணிக்கை 560 கோடி. அரசு உதவி குறைவதால், இவர்களின் எண்ணிக்கை 10 கோடி அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுகாதாரத்துக்கு அரசு செய்யும் செலவை விட, மக்களில் அவரவர் தங்கள் பட்ஜெட்டில் செலவு செய்வது தான் அதிகம். அரசின் மொத்த சுகாதார செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் வெறும் ஒரு சதவீதம் தான். ஆனால், மக்கள் செலவு செய்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தாய், சேய் நல சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில், இந்தியா, அதற்கு நிகரான பொருளாதார நாடுகளை விட பின்தங்கியுள்ளது. இந்தாண்டு, உலகம் முழுவதும் 13 கோடியே 60 லட்சம் பெண்கள், குழந்தை
பெறப்போகின்றனர். அவர்களில் ஐந்து கோடியே 80 லட்சம் பேருக்கு தாய், சேய் நல உதவிகள் கிடைப்பதில்லை. பல நாடுகளில் அதற்கு போதுமான நிதி இல்லை.
இந்தியாவில், 43 சதவீத பெண்களுக்கு சுகாதார உதவியை அரசால் கொடுக்க முடியாத நிலையில் நிதி பற்றாக்குறை உள்ளது. இவர்கள் தாங்களே செலவு செய்து கொள்வதுடன்,போதுமான சுகாதார வசதிகளை பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, நகரங்களில் வாழும் பெண்களில் 75 சதவீதம் பேர் சுகாதார வசதிகளை பெறுகின்றனர்; கிராமங்களில் உள்ள பெண்களில் 39 சதவீத பேருக்கு தான் சுகாதார வசதி கிடைக்கிறது. இன்னமும் கூட, 59 சதவீத பெண்கள்,வீட்டில் தான் பிரசவம் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலை, இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்ரிக்க நாடுகளில் பலவற்றில் உள்ளது. கென்யாவில் ஐந்து வயதுக்கு கீழ் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம்.
No comments:
Post a Comment