Tuesday, October 28, 2008

பீகார் மாநிலத்தில் மகாபாரத 'நவீன' சூதாட்டம்!


பாட்னா: மகாபாரத கதையில், சூதாட்டத்தில் கவுரவர்களிடம் மனைவி திரவுபதியை இழந்தது போல, பீகார் மாநிலத்தில், சூதாட்டக்கணவன், தன் நண்பர்களிடம் மனைவியை இழந்தான்; நண்பர்கள் உரிமை கோரவே, போலீசில் தஞ்சம் அடைந்தாள் அப்பாவிப் பெண். பீகார் மாநிலம் சேகர்புரா பகுதியை சேர்ந்தவர் முகமது முக்தார்; அவர் மனைவி ஷப்ணம். நண்பர்களுடன் சூதாடும் பழக்கம் உள்ளவர் முக்தார். இதில் ஏகப்பட்ட பணம், வீட்டில் உள்ள பொருட்களை இழந்து விட்டார். சமீபத்தில், வீட்டில் எந்த பொருளும் இல்லாத நிலையில், மனைவியை வைத்து சூதாடினார். அப்போது நான்கு நண்பர்கள் அவருடன் சூதாடினர். அதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டனர். இதையடுத்து, மனைவி ஷப்ணத்தை தங்களுடன் வரும்படி வற்புறுத்தினர். "என்னை வைத்து என் கணவன் சூதாடியது எனக்கு தெரியாது. நான் உங்களுடன் வர மாட்டேன். மிரட்டினால் போலீசில் புகார் செய்வேன்' என்று கூறினார். ஆனால், நண்பர்களோ கேட்பதாக இல்லை. அவரை வலுக்கட்டாயமாக தங்களுடன் வரும்படி கையை பிடித்து இழுத்தனர். பயந்துபோன ஷப்ணம், தன் இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சல் போட்டார். இதையடுத்து, கிராமத்தில் உள்ளவர்கள் ஷப்ணத்தை காப்பாற்றி, நண்பர்களை விரட்டினர். நண்பர்களால் தனக்கு தொடர்ந்து தொந்தரவு வரும் என்று நினைத்து, போலீசில் புகார் செய்தார் ஷப்ணம்.
தகவலறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், கிராமத்துக்கு விரைந்து, முக்தாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரின் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

No comments: