Saturday, October 4, 2008

டீச்சர் டூ முதல்வர்! : ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியை ; இப்போது மாநில முதல்வர் ; ஜெட்டில் பறக்கிறார் ; குவித்ததற்கு கணக்கில்லை


சாதாரண குடும்பத்தில் பிறந்து, பள்ளி ஆசிரியையாக வாழ்க்கையை துவங்கிய மாயாவதி, இன்று அரசியல்வாதிகளிலேயே அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். தனியார் ஜெட் விமானங்களில் பறக்கிறார். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். லக்னோவில் திரும்பும் திசையெங்கும் தனது சிலைகளை அமைத்துள்ளார். அதி நவீன வசதியுடைய அழகு நிலையங்களுக்கு சென்று தன்னை அழகு படுத்திக் கொள்கிறார்.

தனது கட்சியினரால் "பெகன்ஜி' (சகோதரி) என அழைக்கப்பட்ட மாயாவதி, இன்று "மேடம் மாயாவதி' என மரியாதையும், பணிவும் கலந்த வார்த்தைகளில் அழைக்கப்படுகிறார். ஏன், இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் மாயாவதியின் பெயரும் இருக்கிறது. எப்படி சாத்தியமானது இந்த அசர வைக்கும் வளர்ச்சி. "அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தால், அந்த கட்சியின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிக்கிறது' என்ற அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்ற வார்த்தையை உண்மையாக்கியுள்ளது.

தந்தை வெறும் கிளார்க்: மாயாவதி சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பிரபு தாஸ், தொலை தொடர்பு துறையில் கிளார்க் ஆக பணிபுரிந்தார். மாயாவதியின் குடும்பம் மிகப் பெரியது. பிரபு தாசுக்கு மாயாவதியையும் சேர்த்து ஏழு குழந்தைகள். டில்லியில் சட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை முடித்த மாயாவதி, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமுடன் ஏற்பட்ட சந்திப்பு, அவரது வாழ்க்கையை புரட்டி போட்டது. அவர் கட்சியை துவக்கியதும், மாயாவதி தன்னை அதில் இணைத்துக் கொண்டார். "ஆதி திராவிட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கான கட்சி இது' என கன்சிராம் அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மேடைகளில் மாயாவதி ஆவேசமாக முழங்கினார். அவரது பேச்சு, ஆதி திராவிட மக்களை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அவரது இந்த ஆவேச பேச்சுத்தான், பின்னாளில் கன்சிராமின் அரசியல் வாரிசாக ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மாயாவதியை தேர்ந்த அரசியல்வாதியாகவும், இந்தியாவின் அடுத்த பிரதமரை நிர்ணயம் செய்யும் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யின் முதல்வராகவும் உருவாக்கிய பெருமை, கன்சிராமைத் தான் சேரும். முதல் முதலாக 1995ம் ஆண்டில், முதல்வராக பொறுப்பேற்றபோது, இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் (39) முதல்வரானவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

மென்மையானது எப்படி? கடந்த 2006ல் கன்சிராம் இறந்த பின், தனது தோற்றம், பழக்க வழக்கம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார், மாயாவதி. தன்னைப் பற்றி மக்களிடையே மிக உயர்ந்த "இமேஜ்' உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டது. அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மாயாவதி, சமீபகாலமாக மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். "அதிகாரிகளை கடுமையான வார்த்தைகளில் பேசி, அவர்களை வெளியே விரட்டிய காலம் எல்லாம் உண்டு' என்கிறார் பாதிக்கப்பட்ட அதிகாரி ஒருவர். தற்போதெல்லாம், லக்னோவில் இருந்து டில்லிக்கு வந்தால், ஐந்து நட்சத்திர ஓட்டலில் தான் தங்குகிறார். அந்த வகையில் மாயாவதி மிகவும் விரும்பித் தங்கும் இடமாக ஒபராய் ஓட்டல் மாறியுள்ளது. பத்திரிகையாளர்களை சந்திப்பது எல்லாம் இங்கே தான். ஓட்டலுக்கு வரும்போது, மெயின் கேட் வழியாக வருவது இல்லை. ஓரமாக இருக்கும் நுழைவாயில் வழியே வருகிறார். இந்த ஓட்டலின் கீழ் தளத்தில் இருக்கும் அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை அழகு படுத்திக் கொள்வது, தனது தோற்றத்திற்கு ஏற்ப முடிவெட்டிக் கொள்வது ஆகியவற்றை வழக்கமாக கொண்டுள்ளார்.

எப்போதும் பறக்கிறார்: சட்டமேதை அம்பேத்கர், ஆதி திராவிட இன மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, தான் எங்கு சென்றாலும் மிடுக்காக உடையணிந்து செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதுபோலவே மாயாவதியும், ஆடம்பரமான உடைகளையும், வைர நகைகளையும் அணியும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தான் பயணம் செய்வதற்கு பிரத்யேகமான அரசு விமானத்தையும், தனியார் ஜெட் விமானங்களையும் பயன்படுத்துகிறார். சொந்த விஷயங்களுக்காக செல்வதற்காக பிரத்யேக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகிறார். நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டதன் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்ற கூற்றை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேச அளவில் தனக்கு ஒரு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல் அவர் தன்னை மாற்றிக் கொள்கிறார் என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள்.

பின்பாட்டு பாடவேண்டும்: மாயாவதியை பொறுத்தவரை எதுவும் சரியாக இருக்க வேண்டும். அவர் என்ன கூறினாலும், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், "ஓ.கே., மேடம்' என பின்பாட்டு பாடும் அதிகாரிகளைத் தான் அவருக்கு பிடிக்கும். பிடிவாதமும், கோபமும் உடையவர். "மாயாவதி குழந்தை பருவத்தில் இருந்தே இப்படித்தான்' என்கிறார், அவரது அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பத்திரிகையாளர் அஜய் போஸ். அவர் கூறுகையில், "கடந்த 1980களில் கன்சிராமுடன் மாயாவதியை பார்த்துள்ளேன். ஒரு வித தடுமாற்றத்துடனும், முரட்டுத்த தனத்துடனும் அவர் காணப்பட்டார். எந்த பிரச்னையையும், ஆவேசமாக பேசுவது அவரது இயல்பு' என்கிறார். தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும் அவர் இதே முறையைத் தான் பின்பற்றினார். பா.ஜ.,வுடன் கூட்டணி ஆட்சி அமைத்து, ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்ததும், அவர்களுக்கு "தண்ணி' காட்டினார். தனது நீண்ட நாள் அரசியல் எதிரிகள் முலாயம் சிங் யாதவ், அமர் சிங் ஆகியோர் மீது சரமாரியான வழக்குகளை தொடுத்தார். இதனால், அவர்கள் வேறு வழியின்றி காங்., தலைவர் சோனியாவிடம் அடைக்கலம் புக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. தாஜ் ஊழல் வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல வழக்குகள் இவருக்கு எதிராக தொடுக்கப்பட்டன.ஆனால், அதற்கு எல்லாம் இவர் அசரவில்லை.


தனிமை விரும்பி: உங்களிடம் எப்படி இவ்வளவு பணம் வந்தது, இத்தனை சொத்துக்கள் எப்படி வாங்கி குவித்தீர்கள் என்ற எதிர்க்கட்சி மற்றும் போலீசாரின் கேள்விகளுக்கு, "இது என்ன சின்ன பிள்ளத் தனமான கேள்வி. இதெல்லாம் கட்சி தொண்டர்கள் எனக்கு கொடுத்த பிறந்த நாள் பரிசுகள்'என கூறி வாயடைக்க வைத்தார். தனது பிறந்த நாள் விழாக்களையும் மிக ஆடம்பரமாக நடத்தி, கட்சி தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தினார். பிறந்த நாள் விழாக்களில் ரூபாய் நோட்டு மாலை போட தொண்டர்களை அனுமதிப்பது, ஆடம்பரம் தெரிய வேண்டும் என்பதற்காக இளம் சிவப்பு நிற உடைகளை அணிவது, பிரேஸ்லெட் மற்றும் வைர நகைகளை அணிவது, மிக பிரமாண்டமான கேக்குகளை வெட்டுவது போன்றவற்றை கடைப்பிடித்தார். மாயாவதி எப்போதுமே தனிமை விரும்பி. ஆனால், தற்போது தனக்கு விசுவாசமான சிலரை தன்னுடன் கூடவே வைத்துள்ளார். தனது சகோதரி முன்னி, சகோதரர் சித்தார்த், பயண ஏற்பட்டாளர் பவன் சாகர், அவரது மனைவியும், அழகு நிலையம் நடத்தியவருமான பூனம், டெலிபோன் ஆபரரேட்டர் குஷ்வா ஆகியோர் தான், மாயாவதிக்கு தற்போது நெருக்கமானவர்கள். இவர் களை மீறி அவரை யாரும் அத்தனை எளிதில் அணுகி விட முடியாது.

காத்திருக்கணும்: இவருக்கு சொத்து சேர்ந்தது எப்படி, ஆடம்பரமாக மாறியது எப்படி என பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், அவரின் அடி மனதில் அரசியல் தந்திரங்கள் ஊறிப் போயிருப்பதை பலர் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கின்றனர். உயர் வகுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து, அவர்களது ஓட்டு வங்கியை தன் பக்கம் இழுத்ததை இதற்கு உதாரணமாக கூறுகின்றனர். சாதாரணமான ஒரு நபர், இதுபோன்ற அரசியல் தந்திரங்களை மேற்கொள்ள முடியாது என அடித்துக் கூறுகின்றனர். மாயாவதியின் இந்த அசுரத்தமான வளர்ச்சி, பிரதமர் பதவியை குறிவைத்துத் தான் என அரசியல் வட்டாரங்கள் உறுதியாக நம்புகின்றன. அவரிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இதை வெளிப்படையாக காட்டுவதாக தெரிவிக்கின்றனர். அப்போது, சகோதரி மாயாவதி, மேடம் மாயாவதி ஆன கதை மறக்கடிக்கப்பட்டு, மேடம் மாயாவதி, பிரதமர் மாயாவதி ஆனது எப்படி என பரபரப்பாக பேசும் நிலை ஏற்படும். மாயாவதி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா, அல்லது உ.பி., முதல்வர் பதவியிலேயே நீடிப் பாரா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்.

ஓநாயை விரட்டிய அனுபவம்: மாயாவதி தனது குழந்தை பருவம் குறித்து, வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கூறியிருப்பதாவது: சிறுமியாக இருக்கும்போது, உ.பி.,யில் கிராமத்தில் உள்ள எனது தாத்தா வீட்டுக்கு சென்றேன். தாத்தாவுடன் ஆள் அரவமற்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எங்களை ஒரு ஓநாய் வழி மறித்தது. பயந்துபோன என் தாத்தா" ஓடிப் போய் விடுவோம் வா' என கூறினார். ஆனால், நான் சிறிதும் பயமின்றி ஓநாயை விரட்டினேன். ஓநாயின் பின்னாலேயே நீண்ட தூரம் விரட்டிச் சென்றேன். அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், என்னை இழுத்து பிடித்து, தாத்தாவிடம் ஒப்படைத்தனர். இதை இப்போது நினைத்து பார்த்தாலும் ஆச்சர்யமாக உள்ளது. இவ்வாறு அதில் மாயாவதி கூறியுள்ளார்.

சைவத்துக்கு மாறியதால் 15 கிலோ எடை குறைந்தார்: மாயாவதி, முன்பெல்லாம் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அதிலும், கோழி மற்றும் ஆட்டுக் கறிகள் என்றால் ஒரு பிடி பிடிப்பார். டாக்டர்களின் ஆலோசனையை அடுத்து, தற்போது அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு சைவத்திற்கு மாறி விட்டார். தோசையும், சாம்பாரும் அவரின் விருப்ப உணவுகளாக மாறிவிட்டன. உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 15 கிலோ எடை குறைந்துள்ளார். துவக்கத்தில் என்ன கிடைக்கிறதோ, அதை சாப்பிட்ட மாயாவதி, தற்போது தனக்கு என்ன தேவை என்பதை சமையல்காரர்களிடம் முன் கூட்டியே கூறிவிடுகிறார். உடல் நலத்தை கருத்தில் கொண்டு, உணவு பழக்கத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகிறார்.

பியூட்டி பார்லருக்கு ரெகுலர் கஸ்டமர்: சமீபகாலமாக, தனது தோற்றத்தை மேம்படுத்து வதிலும் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். முடியை ஒழுங்கு படுத்திக் கொள்வது, பேசியல் செய்வது ஆகியவற்றின் மூலம் இளமையாக காட்டிக் கொள்வதை அதிகம் விரும்புகிறார். டில்லியின் நட்சத்திர ஓட்டலில் உள்ள அழகு நிலையத்திற்கு அடிக்கடி சென்று தன்னை அழகு படுத்திக் கொள்கிறார்.

வருமான வரி ரூ.26 கோடி: இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளிலேயே அதிகமான தொகையை வருமான வரியாக செலுத் தியவர்கள் பட்டியலில் மாயாவதி முதல் இடத்தை பிடித்துள்ளார். 2007-08ம் ஆண்டில் 26 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தியுள்ளார்.

1 comment:

Writer Prabhu Rajan said...

ஆதி திராவிட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கான கட்சி இது'

how adhi dravida coming to uttar pradesh politcs.

You mention "Dalith"