
சத்துணவு பற்றாக்குறையால் ஒருபுறம் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் உடல் உழைப்பில்லாமல் உட்கொள்ளும் சத்தான
உணவால் ஏற்படும் நோய்களும் அதிகரித்து வருகின்றன. உணவு பஞ்சத்தால் ஏற்பட்ட நோய்களை சமாளிப்பதை விட, இன்று உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படும் நோய்களை சமாளிப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டாலும், சமச்சீரான சத்துணவை அனைத்து மக்களுக்கும் சீராகக் கொண்டுசெல்வதில் இன்னும் பின்தங்கியே உள்ளது. இதனால் வசதி மிக்க மக்கள் அதிக ஊட்டச்சத்தால் ஏற்படும் நோய்களாலும், வசதி இல்லாதவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்களாலும் தவிக்கின்றனர்.
எதனால் குறைபாடு? : அரிசி, கோதுமை ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தாலும், பருப்பு வகை விளைச்சலில் பற்றாக்குறை உள்ளது. தவிர, சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட பிற தானிய உற்பத்தி அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நகரத்தில் வசிக்கும் மக்கள்தொகையும் 40 சதவீதம் வரை அதிரித்துள்ளது. இதனால் குழந்தைகள் உள்ளிட்ட பிறருக்கு சரிவிகித சத்துணவு முழுமையாகக் கிடைப்பதில்லை. நமது முன்னோர் இயற்கையாக விளைவித்த காய்கறிகள், பழங்கள், விளைபொருட்களால் ஆன உணவை உண்டனர்; பல மைல் தூரம் காலாற நடந்ததால் உடலில் கொழுப்பும் இனிப்பும் சேராமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இன்றைய வேகமான நகர வாழ்க்கையில் வாகனங்களில் பயணிப்பது அதிகரித்து விட்டது; உடல் உழைப்பே இல்லாமல் போய் விட்டது. கிடைத்ததை உண்டு பறக்கும் அவசர வாழ்க்கை முறை நோய்களை வரவேற்கிறது. பெற்றோரின் தவறான வாழ்க்கை முறைக்கு குழந்தைகளும் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
புஷ்டியால் ஆபத்து: பீசா, பப்ஸ், பர்கர், நூடுல்ஸ், சிப்ஸ் போன்ற "பாஸ்ட் புட்' உணவுக்கு அடிமையாகி வரும் குழந்தைகள், வயதை மீறிய உடல்வாகுடன் வலம் வருகின்றனர். இதை உணராத பெற்றோர், தங்கள் குழந்தைகள் அதிக புஷ்டியாக வளர்வதாக மகிழ்கின்றனர் பெற்றோர் சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் "கொழுகொழு குழந்தை' போட்டிகளில் தங்கள் குழந்தைகளை பங்கேற்கச் செய்து பெருமைப்படுகின்றனர். இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்
விதமாக, "சிறு வயதில் வயதுக்கு மீறிய எடையுடன் உள்ள குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இருதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள் வர வாய்ப்புள்ளது' என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். வளரும் தலைமுறையை நோயாளிகளாக மாற்றி வரும் இன்றைய உணவு முறையின் அபாயம் பற்றி, கோவை, அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வு குறித்து துறைத் தலைவர் பிரேமகுமாரி கூறுகையில், ""அதிகச் சத்து பிரச்னை, வசதியான பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் மத்தியில் மட்டுமே உள்ளது. சராசரி எடையை விட 10 சதவீதம் அதிக எடையுள்ள குழந்தைகள் "ஓவர் வெயிட்' குழந்தைகளாகவும், 20 சதவீதம் அதிக எடை உள்ள குழந்தைகள் "ஒபிசிட்டி' குழந்தைகளாகவும் கருதப்படுகின்றனர்,' என்றார்.
ஊளைச்சதை வேண்டாம்: சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து உலக சுகாதார கழகம் ஆய்வு நடத்தியது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 12.4 சதவீத சிறுவர்கள் ஊளைச்சதை (ஒபிசிட்டி) பிரச்னையால் பாதிக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. அவிநாசிலிங்கம் பல்கலையின் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை பேராசிரியர்கள் கல்பனாவும் லட்சுமியும், கோவையில் 20 தனியார் பள்ளிகளில் படிக்கும் 10 முதல் 12 வயது வரையிலான 9,000 குழந்தைகளின் உணவுப் பழக்கங்கள் குறித்து ண்மையில் ஆய்வு நடத்தினர். இதில் 9 சதவீத குழந்தைகள் அதிக எடையுடனும், 7 சதவீத
குழந்தைகள் "ஒபிசிட்டி' பிரச்னையுடன் தவிப்பதும் கண்டறியப்பட்டது.
இது குறித்து பேராசிரியர் கல்பனா கூறியதாவது: குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு பெற்றோரே முழுக் காரணம். குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர்; குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. "டிவி'
பார்க்கும் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க, குழந்தைகளின் கைகளில் நொறுக்குத் தீனி திணித்து கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் ஈடுபடுத்துகின்றனர். உடல் உழைப்பு இல்லாத இக்குழந்தைகள் வயதுக்கு மீறிய எடையுடன் வளர்கின்றனர். நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் வசதியான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்குதான் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் குழந்தைகளை ஒரு மணி நேரம் சுதந்திரமாக விளையாட அனுமதிப்பதே இப்பிரச்னைக்கு தீர்வு. இவ்வாறு கல்பனா கூறினார்.
உணவின் இன்னொரு பக்கம்: ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக இன்றைய பள்ளிக் குழந்தைகளில் "உயரத்துக்கு ஏற்ற எடையின்மை', "வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை' ஆகிய இரு குறைபாடுகளும் அதிகரித்து வருவதும், 70 சதவீத "டீன் ஏஜ்' மாணவர்களுக்கு ரத்த சோகை, அயோடின் குறைபாடு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாதவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாக இருந்தது; இன்று 19 சதவீதமாக உயர்ந்துள்ளது. 12 முதல் 60 மாதம் வரையுள்ள குழந்தைகளில் 50 முதல் 60 சதவீதத்தினர் எடைக்குறைவாக உள்ளனர்.
குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் ஊட்டச்சத்து குறைபாடு, அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று ஆகியவை இதற்கான முக்கிய காரணங்கள்.
நுண்ணூட்டச் சத்து குறைபாடு: இன்று நாடு சந்திக்கும் முக்கிய பிரச்னை நூண்ணூ ட்டச் சத்து குறைபாடு. சத்து குறைவால் எடைக் குறைவான குழந்தை பிறப்பு, குறைந்த செயல்திறன், தொற்றுநோய் பாதிப்பு, கருச்சிதைவு, மூளை வளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நாட்டின் 321 மாவட்டங்களில் நடத்திய ஆய்வில், 260 மாவட்டங்களைச் சேர்ந்த 10 சதவீதத்துக்கு அதிகமானோர் "காய்ட்டர்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேசமயம், வசதி படைத்தவர்கள் அதிக ஊட்டச்சத்து உணவு உண்பதால் ஏற்படும் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். தொந்தி பிரச்னை சமீபகாலமாக குழந்தைகளையும் பாடாய்ப் படுத்தி வருகிறது. இந்தியாவில் இன்று 30 சதவீத குழந்தைகள் "ஒபிசிட்டி' பிரச்னையில் சிக்கித் தவிப்பதாக, டில்லி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, கோவையை சேர்ந்த உணவு மற்றும் "பிட்னஸ்' சிகிச்சை டாக்டர் அசன் முகமது கூறுகிறார். ""முன்பு பெண் குழந்தைகள் 15 வயதுக்குப் பின்னரே
பூப்பெய்து வந்தனர். நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகும் இன்றைய பெண் குழந்தைகள், குழந்தைத் தன்மை முழுமையாக விலகாத பத்து வயதுக்குள்ளேயே பூப்பெய்து விடுகின்றனர். இப்பருவத்திலேயே ஹார்மோன் உற்பத்தி துவங்கி விடுவதால், 20 வயதிலேயே உடல் எடை அதிகரித்து நோய்களுக்கு ஆளாகின்றனர்; 25 வயதில் 50 வயது பெண்ணுக்கான தோற்றம் வந்து விடுகிறது. இது உடல் ஆரோக்கியத்தையும் திருமண வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும்,'' என்கிறார் டாக்டர் முகமது அசன்.
"ஒபிசிட்டி'யை கண்டுபிடிப்பது எப்படி?:
ஒருவர் தனது உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக்க வேண்டும். உடல் எடையை (கிலோ) உயரத்தின் (மீட்டர்) இரு மடங்குடன் வகுத்தால் "பாடி
மாஸ் இண்டெக்ஸ்' (பி.எம்.ஐ) தெரிந்து விடும். பி.எம்.ஐ. 25 க்கு குறைவாக இருந்தால் நார்மல்'; 25 முதல் 27 க்குள் இருந்தால் அதிக எடை; 27 முதல் 30க்குள் இருந்தால் உங்கள் உடல் ஊளைச்சதையின் ஆதிக்கத்தில் சிக்கி விட்டது என பொருள். பொதுவாக ஆண்களின் வயிறு திருமணத்துக்குப் பின்பும், பெண்களின் வயிறு குழந்தை பிறந்த பின்பும் பெருத்து விடுகிறது. வயிறு, இடுப்புச் சுற்றளவு அதிகரிப்பதுதான் ஆபத்து நெருங்குவதன் அறிகுறி. ஆண்களின் இடுப்புச் சுற்றளவு 37-40 இன்ச் வரையும், பெண்களின் இடுப்பு
32-35 இன்ச் வரையும் இருந்தால் கவலை இல்லை. இந்த அளவு கூடினால் ஆபத்துதான். நேராக நின்றபடி உங்கள் பாதத்தை உங்களாலேயே பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் டாக்டரை பார்க்க வேண்டும் என பொருள்
சம்பாதிக்கும் பெண்களால் ஆபத்து: அதிகரித்து வரும் ஊளைச்சதை பிரச்னைக்கு, குடும்ப வருவாய் உயர்ந்துள்ளதும் காரணம். 20 ஆண்டுகளுக்கு முன் வரை பெண்கள் வேலைக்கு செல்வது அபூர்வமாக இருந்த நிலை இன்று மாறி விட்டது. நகரங்களில் வசிக்கும் பெண்களில் 70 சதவீதத்தினர் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். உட்கார்ந்த இடத்திலேயே வேலைகளில் ஈடுபடும் இளம் பெண்கள் உடல் பருத்து, நாற்பது வயது அம்மணிகள் போல் மாறி வருகின்றனர். இவர்களுக்கு பணம் ஒரு பிரச்னை இல்லை என்பதால் வார இறுதி நாட்களில் ஓட்டலில் சாப்பிடுவதை விரும்புகின்றனர். இப்பழக்கம் அவர்களின் குழந்தைகளையும் தொற்றுகிறது. ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் ஓட்டல் உணவு ருசிக்கு அடிமையாகி, அதிக உடல் எடை பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
என்னதான் தீர்வு?: சரிவிகித சத்துணவு பற்றி ஒரு குடும்பத்தில் முதலில் பெண் அறிந்திருக்க வேண்டும்; பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், குறைந்தபட்சம் ஓராண்டு வரை தாய்ப்பால் புகட்டுவது முக்கியம்.
குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும். வீட்டு உணவில் வாரம் இருமுறை கீரை சேர்க்க வேண்டும். அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தவறாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகள் செய்ய வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment