Sunday, November 9, 2008

திறமை 100 + தில் 100 = காம்பிர் 200


ஈடு இணையில்லாத 206. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை ஆத்திரப்பட வைத்த இருநூறு. வாட்சன் தன் வயிற்றெரிச்சலை வார்த்தைகளில் கொட்ட, காம்பிர் கைநீட்ட வேண்டிய கட்டாயமே உருவானது.ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அரை சதம் அடிப்பதற்கே சூரத்தனம் வேண்டும். டபுள் செஞ்சுரி என்றால் சும்மாவா திறமை மட்டும் இருந்தால் போதாது.
அற்புதமான வீரர். அடித்து ஆடும் பாணியே தனி. நிக்கணும்; ஜெயிக்கணும் என்கிற ஒரே பாஸிட்டிவ் அப்ரோச் உள்ள தனித்துவம் மிக்க வீரர். ஆனால் இவரையும் இடைக்காலத்தில் எடுப்பது, தவிர்ப்பது என்று செலக்ஷன் கமிட்டியினர் தள்ளட வைத்ததுதான் பரிதாபம்.
ரஞ்சி அணியில் காம்பிர் இடம் பிடித்ததே ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த பின்னர்தான். ஆனாலும் காம்பிரை ஆரம்பக்கட்டத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாதது துரதிர்ஷ்டம். அவர் 21 வயதில் நல்ல ஃபார்மில் இருந்தபொழுது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் கிடைக்கும் என முழுமையாக நம்பினார். இறுதியில் எதிராக தன் முதல் டெஸ்ட் சதத்தை அடித்த பின்னராவது அணியில் நிலைக்கலாம் என்று நினைத்தவருக்கு அதன்பின்பும் ஏமாற்றம்தான்.
மனம் தளராது ஒருநாள் போட்டி 20/20 என கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் பின்னிப் பெடலெடுத்தவர், இன்று இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத அம்சம். இன்று அணியின் ஆணிவேர் மாதிரி உருவாகியுள்ள காம்பிருக்கு இப்போது வயது 27.கடந்த ஆறு ஆண்டுகள் இவருக்கு உரிய வாய்ப்பளித்து சரியாக உருவாக்கியிருந்தால் உலக சாதனைகள் பலவற்றைப் படைத்திருப்பார்! என்று காம்பிரின் கடந்த கால சோதனைகளையும் நிகழ்கால சாதனைகளையும் உணர்ச்சி பொங்கக் கூறுகிறார். பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆர்.மோகன்.
இப்படி ஒவ்வொரு வீரரும் தன் சொந்த பலத்தால் சோதனைகள் பலவற்றைத் தாண்டியத்தான் தேசத்தின் புகழை நிலைநாட்ட வேண்டியுள்ளது. இதைத் திட்டமட்டுச் செய்ய வேண்டிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அன்றைய நிர்வாகிகள் ஏதாவது ஒரு ரூபத்தில் திறமைசாலிகளை காயப்படுத்தியதோடு தன் கடமையை முடித்துக் கொண்டனர்.

No comments: