Friday, October 17, 2008

தீராத வெளிநாட்டு வேலை மோகம்


ள்ளூரில் வேலை இல்லை, வறுமை, அதிக சம்பளம் ஆசை போன்ற காரணங்களால் தமிழக இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லத் துடிக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் ஒட்டகம் மேய்த்தல், கோழிக்கறி வெட்டுதல், துணி சலவை செய்தல், முடி திருத்துதல், மருத்துவ கழிவுகளை அகற்றுதல், கனரக வாகனங்கள் ஓட்டுதல், சுமை தூக்குதல், உயரமான கட்டடங்களுக்கு பெயின்ட் அடித்தல், சமையல் உதவியாளர் போன்ற உடல் உழைப்பு வேலைகளை செய்து வயிற்றை கழுவுகிறார்கள். இதற்காக வீடு, நிலம், மனைவியின் நகைகளை விற்று சில போலி தனியார் ஏஜென்சிகளையும், அதன் ஏஜென்ட்களையும் நம்பி பணத்தை கொடுத்து விடுகின்றனர்.



அவர்களில் ஒரு சிலர் மட்டுமே "சிறிய' காகிதத்தில் பணம் கொடுத்த விபரத்தை தேதியுடன் எழுதி வைத்துள்ளனர். மற்றவர்கள் பணம்வாங்கிய ஏஜென்ட்டிடம் கையெழுத்து கூட பெறுவதில்லை. இதற்கு ஏஜென்ட்களும் உடன்படுவதில்லை. இதில் தான் ஏஜென்ட்டுகளின் "தொழில் ரகசியம்' உள்ளது. "ஒரு மாதத்தில் வெளிநாட்டுக்கு விசா வந்து விடும், 20 நாளில் வந்து விடும்' எனக்கூறும் ஏஜென்ட்களின் பேச்சை நம்பி, பணம் கொடுத்தவர்கள் தினமும் தபால் நிலையங்களில் காத்து கிடந்து ஏமாற்றமடைகின்றனர். இன்னும் சில போலி ஏஜென்ட்டுகள் வெளிநாட்டு வேலை கேட்டு வருவோரிடம் பணம் வாங்கியதும், அவர்களை குறிப்பிட்ட நாளில் சூட்கேஸ் சகிதமாக வரவழைத்து ரயில் அல்லது ஆம்னி பஸ்களில் சென்னை அழைத்து செல்கின்றனர். அங்கிருந்து விமானத்தில் மும்பைக்கு அழைத்து சென்று ஒரு வீட்டில் தங்க
வைக்கின்றனர். ஓரிரு நாளில் "விசா' வந்ததும் வெளிநாடு பயணம் தான் என கூறி வேறு சிலரிடம் ஒப்படைத்து விட்டு ஏஜென்ட்கள் கிளம்பி டுகின்றனர். கையில் இருக்கும் சிறிய தொகையில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்தவர்கள் 3 நாட்கள் வரை காத்திருக்கின்றனர். அவ்வப்போது ஏஜென்ட் போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்பர். அப்போது "விசா' இன்று வந்துவிடும்...என ஒரே பதிலையே சொல்வார்.

ஒரு வாரத்திற்கு பின் ஏஜென்ட் கொடுத்த போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியாதபோது தான் ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்ட விபரமே அந்த தொழிலாளர்களுக்கு தெரிய வரும். அதன்பிறகு,சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொடுத்த பணத்தை வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். சிலர் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி மன நோயாளிகளாக மாறுகின்றனர். இன்னும் சிலரோ உறவினர்களுடன் சென்று மோசடி ஏஜென்ட்டிடம் தகராறு செய்தோ, மிரட்டியோ பணத்தை பெற முயற்சிக்கின்றனர். இதில் ஒரு சிலருக்கு மட்டும் பலன் கிடைக்கிறது. எந்த வழியும் தெரியாத சிலரே கடைசியாக போலீசில் புகார்செய்கிறார்கள். போலீசார் அது போன்ற புகார்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறார்கள். அப்படியே ஆதாரங்கள் இருந்தாலும் உடனே வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பல சுற்று கட்டப்பஞ்சாயத்துக்கள் நடத்தப்படுகின்றன.



பின்னர் போலீசாரின் நெருக்குதலால் சில போலி ஏஜென்ட்கள், வாங்கிய பணத்தை, குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக உடன்பாடு ஏற்பட்டது போல் வெற்றுத்தாளில் எழுதிக்கொடுத்து விட்டு போலீஸ் தலையீட்டை தவிர்த்துக் கொள் கின்றனர். அதன்பிறகு வழக்கம் போல் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் கொடுத்தவர்களை லையவிடுகின்றனர். பின்னர், "வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும்படி கேட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசிய வகையிலும், அதற்காக ஏற்பாடுகளை செய்த வகையிலும் ஏற்பட்ட செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து கொண்டு மீதத்தொகையை மட்டுமே தர முடியும்' என்கின்றனர்.


வாங்கிய கடனுக்கு வட்டி அதிகரிப்பதாலும், வீடு, நிலம்,நகையை இழந்த குடும்பத்தினரின் குமுறலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் ஏமாற்றப்பட்டவர்கள், இந்த தொகையாவது கிடைத்ததே என்று மனதை தேற்றிக்கொண்டு போலி ஏஜென்ட் தரும் குறைந்த தொகையை பெற்றுக் கொள்கின்றனர். அதை கொடுக்கும்போது கூட போலி ஏஜென்ட்கள் சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளாதபடி தங்களுக்கும், பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கும் இனி எந்த பிரச்னையும் இல்லை, பண விவகாரத்தை
சுமுகமாக முடித்துகொண்டதாக எழுதி வாங்கிக்கொள்கின்றனர். போலி ஏஜென்ட்களின் மோசடியில் சிக்காமல் ஒரு வழியாக வெளிநாடுகளுக்கு வெல்டிங், பிட்டர், பிளம்பர் போன்ற பணிக்கு செல்வோரில் சிலருக்கு மட்டுமே அந்தந்த பணிகள் கிடைக்கின்றன. உதாரணமாக வெல்டிங் படித்தவர்களுக்கு ஒட்டகங்கள் மேய்த்தல் போன்ற எதிர்பாராத, வேலைகளை செய்யும் நிலை ஏற்படுகிறது. சிலர் அந்த பணியையும் ஏற்று சிரமங்களை தாங்கிக்கொண்டு ஒப்பந்தப்படி பணிபுரிந்து விட்டு சொந்த ஊர் திரும்புகிறார்கள். ஒரு சிலர் அந்த வேலை பிடிக்காமல் சொந்த ஊர் திரும்புகிறார்கள்.


வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற பலருக்கு அங்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி சம்பளம் தருவதில்லை. குறைவாக சம்பளம் தருவதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் பல நாடுகளில் நேரடி சித்ரவதை, பொய் புகாரின் பேரில் சிறை தண்டனை, அதிகமான வேலைப்பளு போன்றவைகளுக்கு ஆளாகுகின்றன. பொறுமை இழந்த பல தொழிலாளர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களில் புகார் செய்தால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் காலம் வரை புகார் கொடுத்த தொழிலாளர்கள் வசதி குறைவான தங்கும் இடத்திற்கு மாற்றம், இரவுப்பணிகளில் மட்டுமே பணியாற்றும் நிலை, போதிய ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலை போன்ற மறைமுக சித்ரவதைக்கு ஆளாக நேரிடுகிறது. இதுபோன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு ஊர் திரும்புபவர்கள் தங்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி ஏமாற்றிய ஏஜென்ட்கள் மீது போலீசாரிடமும், மாவட்ட கலெக்டர்களிடமும் புகார்
கொடுக்கின்றனர்.இதுபோன்ற நிலைமைக்கு ஆளான பெரும்பாலானோர்
ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, சேலம், தர்மபுரி,விருதுநகர் போன்ற மாவட் டங்களையும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களையும் சேர்ந்தவர்களே ஆவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் 2006ல் 6 வழக்குகளும், 2007ல் 7 வழக்குகளும், 2008ல் (செப்.,) 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை வரை கூட முன்னேற்றம் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு இம்மாவட்டத்தில் "போலி' ஏஜன்டுகள் துணிகரமாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை டவுன், இருக்கன்குடி போலீசில் தலா 2 வழக்குகளும், அருப்புக்கோட்டை தாலுகா மற்றும் ராஜபாளையம்
வடக்கு போலீசில் தலா ஒரு வழக்கும், மாவட்ட குற்றப் பிரிவில் 3 வழக்குகளுமாக மொத்தம் 9 வழக்குகள் பதிவாகியுள்ன. இவற்றில் இரு வழக்குகளை விசாரித்த போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என முடிவு செய்துள்ளனர். மீதமுள்ள ஏழு வழக்குகளில் மூன்று கோர்ட் விசாரணையிலும், மூன்று போலீசார் விசாரணையிலும் உள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ளமுத்துசிவலிங்கபுரம் கிராமத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் (த/பெ. மகாலிங்கம்) போலி ஏஜென்ட்டை நம்பி கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்காக ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம் கொடுத் துள்ளார். அவரை சுற்றுலா "விசா'வில் சவுதியிலுள்ள கப்பல் நிறுவனத்துக்கு வேலைக்கு போலி ஏஜென்ட் அனுப்பி வைத்தனர். அங்கு 5 மாதம் கார்த்திகேயன் வேலை செய்தார். அதன் பிறகு "வேலை இல்லை' என்று கூறி இந்தியாவிற்கு அனுப்பி விட்டனர். அவரோ சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு சொந்த ஊர் திரும்புவது பெரும் பாடாகிவிட்டது. இதேபோல் அருப்புக்கோட்டை திருக்குமரன் நகரை சேர்ந்த மகாதேவன் மகன் பாஸ்கரனை வெளிநாட்டு வேலைக்கு போலி ஏஜென்ட் ஒருவர் கொரியாவிற்கு அனுப்பி வைத்தார். பாஸ்கரனிடம் இருந்தது போலி விசா என தெரிய வந்ததால் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு அவர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.



ஏஜென்ட்டிடம் இதை தெரிவித்தபோது, "கொரியா என்ன... அடுத்து லண்டனுக்கு அனுப்பி வைக்கிறோம்' எனக் கூறி மொத்தம் ரூ.மூன்றரை லட்சம் வரை கறந்துள்ளார். இதை நம்பி லண்டன் சென்றபோது அங்கும் விமான நிலையத்திலேயே தவறான விசா என கண்டுபிடித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதுகுறித்து செந்தில்குமார் எஸ்.பி., கூறுகையில், வெளிநாடு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் தாங்கள் அணுகும் ஏஜென்ட் நேர்மையானவரா; அவர் மூலம் நல்ல வேலை கிடைக்குமா என்பதை விசாரித்து உறுதி செய்து தெரிந்து கொண்ட பின் வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.


வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் முன்கூட்டியே கவனிக்க வேண்டியவை:


வெளிநாட்டிற்கு செல்லும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.வெளிநாட்டிற்கு குடிபெயர்வோர் நல வாரியம் என மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தனித்துறை செயல்பட்டு வருகிறது. இந்த கிளை தற்போது சென்னையிலும் உள்ளது. வெளிநாடு வேலைக்கு
செல்பவர்களுக்காக இந்திய அரசின் முறையான அங்கீகாரம் பெற்ற ஏஜென்ட்டுகள் உள்ளிட்ட பல தகவல்களை அந்த அமைச்சக கிளையின் தீதீதீ.ட்ணிடிச்.ஞ்ணிதி.டிண அல்லது டிணஞூணி@ட்ணிடிச்.ணடிஞி.டிண என்ற வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர். பரமக்குடியில் செயல்பட்டுவரும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பாதுகாப்பு நல இயக்கம் என்ற நிறுவனத்தின் துணைத்தலைவர் மாதவன் கூறுகையில், " இந்திய அரசிடம் பதிவு சான்றிதழ் பெற்ற ஏஜென்ட்களை மட்டுமே நம்பி செல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் மும்பையில் ஒருவர் பதிவு பெற்ற ஏஜென்ட்டாக இருந்தால் அவருக்கு கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சப் ஏஜென்ட்கள் விளம்பரங்களை கொடுத்து லாட்ஜ்களில் தங்கி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிலை உள்ளது. சட்டப்படி ஏஜென்ட் பதிவு பெற்ற இடத்தில் மட்டும்தான் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டும். கண்டிப்பாக சப் ஏஜென்ட்கள் வைத்திருக்க கூடாது. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் ஏஜென்ட்கள் சொல்வதை மட்டும் நம்பி செல்லக்கூடாது. தாங்கள் செல்லும் முன், வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வேலைக்கான கான்ட்ராக்ட் கடிதத்தை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். அந்த கடிதத்தில் வேலை விபரங்கள், சம்பளம், தங்கும் வசதி, உணவு, ஓ.டி., சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்ற அனைத்து நிபந்தனைகளும் இடம் பெற்றிருக்கும். இந்த நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் வெளிநாட்டில் உள்ள தூதரகத்தில் புகார் தெரிவிக்கலாம். பலர் சரியான சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாமல் ஏஜென்ட்டுகளை மட்டும் நம்பி செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் வெளிநாட்டிற்கு சென்றவுடன் தங்களது பாஸ்போர்ட்டை வெளிநாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்து விடுவதால் அடிமை போல் இருக்கும் நிலை ஏற்படுகிறது. அமெரிக்காவில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் எங்கள் அமைப்பு தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்துவருகிறோம். இவ்வாறு மாதவன் கூறினார்.


வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன!
வெளிநாட்டு வேலைக்கு செல்லும்போது கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் வருமாறு: * கண்டிப்பாக பாஸ்போர்ட்டை தங்களது பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும்


* வேலை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனத்தின் ஊழியர் ஒப்பந்த கடிதம்.(வேலை நியமன கான்ட்ராக்ட் காப்பி)


* வேலை நியமன உத்தரவு நகல்
* வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் முகவரி மற்றும் டெலிபோன் எண்களை தெரிந்து எந்நேரமும் தயாராக சட்டை பையில் வைத்திருக்க வேண்டும்.
* உள்ளூர் முகவரி மற்றும் டெலிபோன் எண்கள், வெளிநாட்டில் யாரேனும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் இருந்தால் அவர்களது முகவரி மற்றும் டெலிபோன் எண்களை கையில் வைத்திருக்க வேண்டும்.


இன்சூரன்ஸ் அவசியம்:
ராமநாதபுரம் வக்கீல் தினகரன் கூறும்போது, "சட்டப்படி ஒருவர் வெளிநாடு செல்லும் முன் அணுகும் ஏஜென்ட் இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டவரா என்றும் பதிவு அலுவலகத்தில் பதிவு சான்றிதழை அனைவரும் பார்க்கும்படி
வைத்துள் ளாரா என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் பதிவு சான்றிதழை கேட்டு பார்த்து கொள்ள உரிமை உண்டு. வெளிநாடு செல்லும் முன் கண்டிப்பாக இன்சூரன்ஸ் எடுத்து, பாண்டு பத்திரத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். இந்த இன்சூரன்ஸ் பாண்டு பத்திரத்தை பலர் ஏஜென்ட்களிடம் கொடுத்துவிடுகின்றனர். வெளிநாட்டில் ஏதாவது விபத்து, மரணம் ஏற்பட் டால் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு கண்டிப்பாக பாண்டு பத்திரம் குடும்பத்தினரிடம் இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் குறித்த தகவல் கள் அரசுக்கு தெரிவித்த பின் தான் செல்ல வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. இவ்வாறு வக்கீல் தினகரன் கூறினார்.



அதிக வேலைபாலியல் தொல்லை: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பலர் குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் இருந்து விடுபடவே சில நாட்கள் ஆகும். அதற்கு பிறகு வேலைக்கு வந்த நாட்டில் தங்கும் இடம், உணவு, தட்பவெப்ப நிலை போன்றவற்றுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சில நாட்கள் ஆகும். ஆனால் அதற் குள்ளாகவே வேலை சிர மங் கள், சம்பள பிரச்னை, அந்தந்த நாடுகளின் மொழி மற்றும் சட்ட திட்டங்கள் போன்றவற்றால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் கள்ளத்தனமாக தப்பி
வந்தால் போதும் என கருதி, ஏதாவது சட்டச்சிக்கலில் சிக்கி சிறைக்கு செல்கின்றனர். அவர் களை மீட்க குடும்பத்தினர் யார் உதவியை நாடுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

நர்ஸ், வீட்டு வேலை போன்ற வேலைக்கு செல்லும் பெண்களில் பலர்
கொத்தடிமைகள் போல் ஓய்வின்றி அதிக நேரம் உழைத்தல், பாலியல் தொல்லை போன்ற இன்னல்களுக்கு ஆளாகி இறந்து விடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வர குடும்பத்தினர் படும் கஷ்ட ங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதன்பிறகு வேலை கொடுத்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவோ, நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரவோ பாதிக்கப் பட்டவர்களின் குடும் பத்தினருக்கு எந்த வழியும் தெரியாமல் போய் விடுகிறது.

3 comments:

ஆட்காட்டி said...

நன்று.

parathesi said...

very good article.
pls mention the clear website address in english.

பின் புலம் said...

If any one can need help in this regards they may contact from any where in the world to Indian External affairs’ information center No. 0091 11 40503090