Monday, December 22, 2008

தூக்கத்தில் 'இ-மெயில்' தரும் வியாதி தெரியுமா?


லண்டன்: தூக்கத்தில் நடக்கிற வியாதி சிலருக்கு இருக்கும் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள்; தூக்கத்தில், "நெட்' பார்க்கும் வியாதி, "இ -மெயில்' அடிக்கும் வியாதி என்று கூட சிலருக்கு ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒகியோ மாநிலத்தை சேர்ந்த 44 வயது பெண், இந்த வகையில் உலக சாதனை படைப்பார் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். தூக்கத்தில் நடக்கிற வியாதி போல, இவருக்கு தூக்கத்தில் "நெட்' பார்க்கும், "இ - மெயில்' அடிக்கும் வியாதி உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. "இந்த வகையில், தூக்கத்தில் "இ - மெயில்' அடிக்கும் உலகின் முதல் நோயாளியாக இவர் இருக்கலாம்; இன்னும் சிலர் எந்த நாட்டிலாவது கூட இருக்கலாம்' என்றும் அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த பெண், "தூக்கத்தில் இ - மெயில் அடித்தது தொடர்பாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "ஸ்லீப் மெடிசன்' என்ற மருத்துவ இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: இந்த பெண், நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து, கம்ப்யூட்டரை "ஆன்' செய்துள்ளார்; இன்டர்நெட் பார்த்து, அதில் மூன்று பேருக்கு "மெயில்' செய்துள்ளார். மறுநாள் அந்த மெயிலுக்கு பதில்கள் வந்துள்ளது. ஆனால், அவருக்கோ அதிர்ச்சி. நான் இப்படிப்பட்ட மெயிலே அனுப்பவில்லை என்று அடித்துச்சொன்னார். மெயில் "செக்' செய்து பார்த்தபோது, நள்ளிரவில் மூன்று மெயில்கள் அனுப்பியது தெரியவந்தது.
மாதத்தில் ஓரிரு நாள் இப்படி இவருக்கு அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்கே அது தெரியவில்லை. வீட்டில் உள்ளவர்களும் இதை கண்டுபிடிக்கவில்லை. மருத்துவ நிபுணர்கள் இவரை விசாரித்து, ஆராய்ச்சி செய்த போது பல விஷயங்கள் தெரியவந்தன. தூக்கத்தில் நடக்கிற வியாதி சிலருக்கு உள்ளது போலத்தான் இந்த "தூக்கத்தில் மெயில் பார்க்கிற' வியாதி. கம்ப்யூட்டரில் மூழ்கிக்கொண்டிருக்கும் பணியில் உள்ள அவருக்கு நண்பர்கள் எல்லாரும் மெயில் மூலம் தான் தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். இதனால், தூக்கத்திலும், அவருக்கு மெயில் நினைவு போவதில்லை.
இப்படிப்பட்ட நிலைமை, கம்ப்யூட் டரை அதிகம் பயன்படுத்தும் இளம் தலைமுறையினருக்கு இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதுதொடர்பாக இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்; அப் போது தான், கனவில் சில உண்மை விஷயங்கள் வந்து போவதும், அதற்கேற்ப ஒருவரின் நடவடிக்கை மாறுவது போல, இதிலும் சாத்தியம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய முடியும் என்று நிபுணர்கள் எண்ணுகின்றனர். இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தூக்கத்தில் எழுந்து கம்ப்யூட்டரில், மெயில் அனுப்பும் போது, அவர் ஆங்கிலத்தில் பதிவு செய்த வார்த்தைகள் புரிந்து கொள்ள முடிகிறதே ஒழிய, தெளிவாக இல்லை என்பதையும் நிபுணர்கள் உணர்ந்தனர்.

No comments: