
இந்தியாவில் எந்த நோயும் ஏற்படுத்தாத பாதிப்பை இப்போது நீரழிவு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. மோசமான உணவு பழக்கம், உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை சுற்றுச்சூழல் பாதிப்பு, மன அழுத்தம் போன்றவற்றால் நீரழிவு நோய் இந்தியர்களை குறிவைத்து தாக்குகிறது.
உலகத்திலேயே இப்போது இந்தியாவில் தான் அதிக நீரழிவு நோயாளிகள் இருப்பதாக சர்வதேச நீரழிவு நோய் தடுப்பு கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
இந்த அமைப்பு எடுத்த ஒரு கணக்கெடுப்பு படி இந்தியாவில் அடுத்த ஆண்டு 5 கோடியே 8 லட்சம் பேர் நீரழிவு நோயாளிகளாக இருப்பார்கள். இது 20, 30-ம் ஆண்டு 8 கோடியே 70 லட்சமாக உயர்ந்து விடும்.
அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 வயதில் இருந்து 79 வயதுக்கு உட்பட்டோரில் 10 லட்சத்து 7 ஆயிரம் பேர் நீரழிவால் உயிரிழப்பார்கள்.
இதில் பெண்கள் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்து 81 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பார்கள்.
இப்போது பெரியவர்களில் 100-ல் 7 பேருக்கு நீரழிவு நோய் இருக்கிறது. இது 2030-ல் 8.4 ஆக அதிகரித்து விடும்.
நீரழிவு நோய் பாதிப்பில் சீனா 2-வது இடத்தில் உள்ளது. அங்கு இப்போது 4 கோடியே 32 லட்சம் பேருக்கு நீரழிவு உள்ளது. 2030-ம் ஆண்டு அது 6 கோடியே 21 லட்சமாக அதிகரிக்கும்.
பாகிஸ்தானில் 71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக வரிசையில் பாகிஸ்தான் 7-வது இடத்தில் உள்ளது. இது 2030-ல் 1 கோடியே 38 லட்சமாக அதிகரித்து உலகில் 4-வது இடத்துக்கு வந்து விடும்.
உலக அளவில் 1985-ம் ஆண்டு 3 கோடி நீரழிவு நோயாளிகள் இருந்தனர். 2000-ம் ஆண்டு அது 15 கோடி ஆனது. அடுத்த ஆண்டு அது 28 கோடியே 50 லட்சம் ஆகிவிடும்.
40 வயதில் இருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்களே அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள். அடுத்த ஆண்டு இந்த வயதினர் 13 கோடியே 20 லட்சம் பேருக்கு நீரழிவு நோய் இருக்கும். இது 2030-ல் 18 கோடியே 80 லட்சமாக இருக்கும்.
அடுத்த ஆண்டு கணக்குபடி 14 கோடியே 30 லட்சம் பெண்களுக்கும் 14 கோடியே 20 லட்சம் ஆண்களுக்கும் நீரழிவு நோய் இருக்கும். 2030-ம் ஆண்டில் 22 கோடியே 20 லட்சம் ஆண்களும், 21 கோடியே 60 லட்சம் பெண்களும் நீரழிவால் பாதிக்கப்படுவார்கள்.
கிராம மக்களை விட நகர மக்களையே நீரழிவு அதிகம் தாக்கும். அடுத்த ஆண்டு 11 கோடியே 30 லட்சம் நகர மக்களும், 7 கோடியே 80 லட்சம் கிராம மக்களும் நீரழிவுக்கு ஆளாவார்கள். 2030-ம் ஆண்டு 22 கோடியே 80 லட்சம் நகர மக்களையும் 9 கோடியே 90 லட்சம் கிராம மக்களையும் இந்த நோய் தாக்கும்.
உலக அளவில் அடுத்த ஆண்டு மட்டும் 20 வயதில் இருந்து 79 வயதுக்கு உட்பட்டோரில் 40 லட்சம் பேர் நீரழிவுக்கு உயிரிழப்பார்கள். இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் தான் அதிகம் பேர் பலியானார்கள்.
உலக அளவில் நீரழிவு நோய்க்குதான் அதிக மருத்துவ செலவு செய்யப்படும் அடுத்த ஆண்டு மட்டும் ரூ.19 லட்சம் கோடி மருத்துவ செலவு செய்யப்படும்.
இது உலக அளவில் செய்யப்படும் மருத்துவ செலவில் 11.6 சதவீதமாகும். இது 2030-ம் ஆண்டில் ரூ.24 லட்சம் கோடியாகிவிடும்.
மற்ற நோய்களை விட அதிக உயிரை குடிக்கும் மோசமான நோயாக நீரழிவு உள்ளது. ஆனால் எந்த நாடுமே இதை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சர்வதேச நீரழிவு நோய் தடுப்பு கூட்டமைப்பு கூறுகிறது.
இதன் இயக்குனர் அனுப் மிஸ்ரா கூறும் போது பிரசவ காலத்தில் பெண்கள் சரியான ஊட்டச்சத்து சாப்பிடுதல், 10 வயதுக்கு பின்னர் தேவையான உடல் உழைப்புகளை மேற்கொள்ளுதல் மூலம் நீரழிவை தடுக்கலாம் என்றார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment