
சென்னை, : இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்துக்கு மேலான தமிழர்கள் பற்றி வெவ்வேறு தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் இருந்தன. இரும்பு வேலிக்குள் தமிழர்கள் மிருகங்களை போல் அடைத்து வைக்கப்பட்டு, பட்டினி போட்டு சித்திரவதை செய்யப்படுவதாகவும், பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும், அப்பாவிகள் புலி ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தி கொன்று புதைக்கப்படுவதாகவும் பல பத்திரிகைகள் செய்திக் கட்டுரைகள் வெளியிட்டன. அந்த தகவல்களில் எந்த அளவில் உண்மை இருந்தது என்பதை அங்கு சென்று திரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது ஆதாரபூர்வமாக தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ‘‘சில கட்சிகளும் அமைப்புகளும் தொடர்ந்து சொல்லி வந்தது போன்று மிகவும் பயங்கரமான சம்பவங்கள் எதுவும் அங்கு நடைபெறுவதாக தெரியவில்லை. முகாம்களில் இருக்கும் மக்களே கூட தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினார்களே தவிர கொடூரமான சம்பவங்கள் நடப்பதாகவோ தாங்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவோ புகார் தெரிவிக்கவில்லை. ராணுவத்தால் அழிக்கப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்களாக தோன்றும் சிலர் மட்டுமே, ‘இங்கு சண்டை உச்ச கட்டத்தை அடைந்தபோதே இந்தியா தலையிட்டு நிறுத்தியிருக்க வேண்டும்; அதை செய்யாமல் விட்டது பெரும் தவறு. அதனால் அரசின் கொடுமை தொடர்கிறது’ என்று கூறினர். முகாம் தமிழர்கள் நிலை குறித்தும், இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ளவும் இந்த பயணம் நிச்சயமாக உதவியது’’ என்று குழுவில் இடம் பெற்றிருந்த சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். குழு செல்வதற்கு முன்பே, அவர்களது பயணத் திட்டமும் தயாரானது. ஆனால், எந்தெந்த முகாம்களுக்கு செல்வது, யாரையெல்லாம் சந்திப்பது என்ற நிகழ்ச்சி அட்டவணை எதுவும் முன்கூட்டியே இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கமான தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை தான் இக்குழுவினர் முதலில் சந்தித்தனர். ஆர்.சம்மந்தன் தலைமையிலான 9 எம்பிக்களிடம் பேசியபோது, ‘முகாம்களில் இருந்த 20 ஆயிரம் பேரை காணவில்லை. கண்ணிவெடிகளை அகற்றிய பிறகு மக்களை ஊர் திரும்ப அனுமதிக்கிறோம் என அரசு சொல்வதெல்லாம் கட்டுக்கதை’ என்று அவர்கள் கூறியுள்ளனர். அதே நேரம் எந்தெந்த முகாம்களை குழு நேரில் சென்று பார்வையிட்டால் உண்மையை அறிந்துகொள்ளலாம் என்ற பட்டியலையும் அவர்களே கொடுத்துள்ளனர். குழுவினரும் அந்த தகவலின்படியே முகாம்களுக்கு சென்று பார்த்துள்ளனர். புலி ஆதரவு இயக்கத்தினர் தெரிவித்த தகவல்கள் பற்றி புலிகளுக்கு எதிரான அமைப்புகளை சேர்ந்த சித்தார்த்தன் (பிளாட்), ஸ்ரீதரன் (ஈபிஆர்எல்எப்), கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் ஆகியோரிடம் தமிழக குழுவினர் விசாரித்தபோது, ‘‘போருக்கு பிறகு யாரும் கொல்லப்படவில்லை; முகாம்களில் வந்து சேர்ந்திருக்கும் இளைஞர்களை தனியாக பிரித்து அவர்களில் புலிகள் யாரும் இருக்கிறார்களா என்று சோதிக்கிறார்கள். முகவரியை கேட்கின்றனர். அது தவறான முகவரி என்று தெரிய வந்தால் அங்கிருந்து வெளியேற்றி வேறு முகாமுக்கு மாற்றுகின்றனர். அப்படி 12,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களில் 2000 பேர் சரியான முகவரியை கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர்’’ என்று தெரிவித்துள்ளனர். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூல் ஹக்கீம் தலைமையிலான நிர்வாகிகள், ‘‘ஒரு தரப்பான தகவல்கள் இலங்கைக்கு வெளியே பரவுவதால் தவறான கருத்து உருவாகிறது. இந்த வேறுபாடுகளை தாண்டி இங்குள்ள தமிழர்களை ஒருங்கிணைத்தால் வலுவான ஓட்டு வங்கியாக மாறி அரசியல்ரீதியாக பலன் அடையலாம். அதற்கு இந்தியா முயற்சி செய்யலாம்’’ என்று யோசனை தெரிவித்துள்ளனர். தமிழ் பிரதிநிதிகளை எல்லாம் சந்தித்த பிறகு அரசு அதிகாரிகளை குழுவினர் சந்தித்துள்ளனர். முதல் 3 முகாம்களை மட்டும் பார்வையிட ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளிடம், எல்லா முகாம்களையும் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய போது அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. ‘‘நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போகலாம்; யாரையும் சந்திக்கலாம். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது மட்டும்தான் எங்கள் பொறுப்பு’’ என்று இலங்கை ராணுவ கமாண்டரும், மாவட்ட பெண் கலெக்டரும் தெளிவுபடுத்தியுள்ளனர். குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, ‘‘அந்த மக்களுக்கு தேவையான வசதிகள் ஐ.நா. அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறப்பாகவே செய்து தரப்படுகின்றன. தண்ணீருக்கும் பால் பவுடருக்கும் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘‘வவுனியாவில் செட்டிகுளம் என்ற பகுதியில் அடர்ந்த காட்டில் 3000 ஏக்கரில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பெரிய மரங்களை வெட்டியுள்ளனர். ஐ.நா. பிரநிதிகள் பராமரிப்பில் தான் முகாம்கள் உள்ளன. ரேஷன் பொருட்களை வழங்குவது மட்டுமே இலங்கை அரசின் பொறுப்பு. அதுவும் மலை போல் வந்து குவிந்துள்ளது. சுனாமியின் போது தமிழகத்திற்கு வந்து குவிந்தது போல் பொருட்கள் வந்துள்ளன. இதனால், இலங்கை அரசுக்கு பெரிய சிரமம் இல்லை. முகாம் நிலவரம் பற்றி ஐநா பிரதிநிதிகளிடம் விசாரித்தோம். அவ்வளவு பேருக்கு கழிப்பிட வசதி போதாது என்றாலும், காட்டுப் பகுதி என்பதால் அதை பெரிய குறையாக யாரும் கூறவில்லை. 26 கி.மீ. தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் கிடைக்கிறது. இன்னொரு லைன் போடப்படுகிறது. முகாம்களில் பள்ளிகள் செயல்படுகின்றன.58 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 2000 தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர். 220 தமிழ் டாக்டர்களுடன் மருத்துவமனையும் நடக்கிறது. வீடு திரும்ப வேண்டும் என்பதை தவிர வேறெந்த குறையும் சொல்லவில்லை’’ என்றார். தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தும் திட்டத்துடன்தான் கண்ணி வெடிகளின் பெயரால் அரசு தாமதம் செய்கிறது என்று கூறப்படுவது பற்றி அதிபர் ராஜபக்சேவை எம்.பிக்கள் சந்தித்தபோது கவலையுடன் விசாரித்தனர். திட்டவட்டமாக அந்த தகவலை மறுத்த ராஜபக்சே, ‘‘தமிழர்களின் பகுதிகளில் தமிழர்கள் மட்டுமே குடியமர்த்தப்படுவார்கள். முகாம்களுக்கு வராமல் பலர் வெளியிடங்களுக்கு சென்று விட்டனர். திரும்பி வரும்போது அவர்களும் அவரவர் இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள். அந்தந்த பகுதிகளில் வசித்தவர்களை தவிர வேறு எவரும் குடிபுக அனுமதிக்க மாட்டோம்’’ என்று தமிழக குழுவிடம் உறுதி கூறியுள்ளார்.
Source : http://www.dinakaran.com/
No comments:
Post a Comment