Friday, October 16, 2009

தேக்கடி படகு வடிவமைப்பில் விதிமீறல் சென்னை நிறுவன உரிமையாளர் கைது


கூடலூர், : தேக்கடியில் செப்.30ம் தேதி, சுற்றுலா துறைக்கு சொந்தமான ஜலகன்னிகா படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலியாயினர். இதையடுத்து டிரைவர் விக்டர் சாமுவேல், உதவியாளர் அனீஸ், படகுத் துறை முதன்மை ஆய்வாளர் மாத்யூஸ், வனத்துறை வாட்சர் பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜலகன்னிகா படகை, சென்னையை சேர்ந்த விக்னேஷ் மரைன் சர்வீசஸ் நிறுவனம் தயாரித்து அளித்து, கடந்த ஆக.17 முதல் கேரள சுற்றுலாத் துறை இயக்கியிருக்கிறது. இந்நிலையில், கேரள ஐஜி ஸ்ரீலேகா உத்தரவின் பேரில், விக்னேஷ் மரைன் டெக்னிகல் சர்வீசஸ் உரிமையாளர் கிரி, இந்தியன் ரிஜிஸ்டர் ஆப் ஷிப்பிங்(ஐஆர்எஸ்) நிறுவன தலைமை சர்வேயர் சஞ்சீவ் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில், இந்த படகுக்கு டிசைன் செய்த சென்னை ஐஐடி இன்ஜினியர் அனந்த சுப்ரமணியம், போலீஸ் அகடமி தடயவியல் இயக்குனர் ஜேம்ஸ் பிலிபோஸ் ஆகியோர் படகை ஆய்வு செய்தனர். இதில், படகு வலதுபுறம் 2.1 டிகிரி சாய்ந்திருந்தது தெரிய வந்தது. ஐஐடி இன்ஜினியர் அனந்த சுப்ரமணியம் கொடுத்த வரைபடத்தில், Ôகீழ் தளத்தில் 50 சீட், மேல் தளத்தில் 25 சீட் இருக்க வேண்டும். படகின் மையப்பகுதியில் ஏணிப்படி அமைக்க வேண்டும். படகு 4 அடி அகலம், 14 மீட்டர் நீளம் இருக்க வேண்டும்Õ என தெரிவித்துள்ளார். ஆனால், படகில் கீழ் பகுதியில் 48 சீட்டுகளும், மேல் பகுதியில் 27 சீட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. படகின் எடையிலும் வித்தியாசம் இருந்துள்ளது. இதற்கு படகு இன்ஸ்பெக்ஸ்டர் மாத்யூஸ் அனுமதியளித்திருக்கிறார். விசாரணையில் இவை தெரியவே, சென்னை விக்னேஸ் மரைன் டெக்னிகல் சர்வீசஸ் உரிமையாளர் கிரி, ஐஆர்எஸ் நிறுவனத்தின் தலைமை சர்வேயர் சஞ்சீவ் ஆகியோரை கேரள குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source : http://www.dinakaran.com/

No comments: