
புதுடெல்லி, : விமான நிலையத்துக்கு வர தாமதம் ஆனதால், பெங்களூர் புறப்படும் விமானத்தில் குண்டு இருப்பதாக போனில் மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை கோ ஏர் நிறுவன விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 158 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனர். இந்த நிலையில், விமான நிலையத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, பெங்களூர் புறப்பட உள்ள கோ ஏர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, விமானத்தில் இருந்தவர்கள் எல்லாரும் அவசரம் அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.ஆனால், வெடி பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு விடுத்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அது 25 வயது கம்ப்யூட்டர் இன்ஜினியர் அபிஷேக் குப்தா வின் செல்போன் எண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பெயர் பெங்களூர் விமானத்தின் பயணிகள் பட்டியலில் இருப்பது தெரியவந்தது. ஆனால், அவர் வரவில்லை என்று தெரிய வந்தது. இந்த நிலையில், பெங்களூர் விமானத்தை பிடிப்பதற்காக அபிஷேக் குப்தா விமான நிலையத்துக்கு அவசரம் அவசரமாக வந்தார். அவரை போலீசார் மடக்கி, விசாரித்தனர். அப்போது, விமான நிலையத்துக்கு வர தாமதம் ஆனதால், வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார். இதையடுத்து அபிஷேக் குப்தாவை போலீசார் கைது செய்த னர்.
Source : http://www.dinakaran.com/
No comments:
Post a Comment