Thursday, October 15, 2009

தீபாவளி சீட்டில் நஷ்டம்: கணவன்- மனைவி தற்கொலை

ராயபுரம், அக். 15-

கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் ரவி (35). ஊதுபத்தி வியாபாரி. இவரது மனைவி மகேஸ்வரி (31). இவர்களுக்கு 12 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து அப்பகுதியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். தீபாவளி சீட்டில் 250 பேர் சேர்ந்தனர். அவர்களிடம் இருந்து தலா ரூ. 1,000 வசூல் செய்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டது. ஏலத்தில் பணம் பெற்ற யாரும் சரிவர திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர் தீபாவளி சீட்டில் வசூலித்த பணத்தை, ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு கொடுத்தார்.

இந்நிலையில் தீபாவளி நெருங்கியதால் சீட்டு எடுத்த அனைவரும் பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் வாங்கி தருமாறு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் வேதனை அடைந்த ரவி தனது குழந்தைகளை எண்ணூரில் உள்ள அக்காள் வீட்டில் விட்டார்.

பின்னர் வீடு திரும்பிய அவர் மனைவியுடன் சேர்ந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் வீட்டில் எட்டிப் பார்த்தனர். அப்போது இருவரும் தூக்கில் பிணமாக கிடந்தனர்.

தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் வீரகுமார் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: http://www.maalaimalar.com

No comments: