Thursday, October 15, 2009

வறுமை காரணமாக வைகை அணையில் குழந்தையை வீசிய பெற்றோர்


தேனி : வறுமை காரணமாக, ஒரு வயது பெண் குழந்தையை வைகை அணையில் வீசி எறிந்து கொலை செய்ய முயன்ற பெற்றோரை, போலீசார் கைது செய்தனர். குழந்தை உயிர் தப்பியது. தேனியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி பாரதிதாசன்(33); மனைவி வசந்தா(21). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். நான்காவதாக பிறந்த பெண் குழந்தை சத்யா(1). இவரின் தலையில் கட்டி இருந்தது. இதை குணப்படுத்த அதிகம் செலவு செய்ய முடியவில்லை.
நேற்று காலை 11 மணிக்கு, பாரதிதாசனும், மனைவி வசந்தாவும் குழந்தை சத்யாவுடன் வைகை அணைக்கு சென்றனர். அணையின் மேல் பகுதிக்கு சென்றவர்கள் மெயின் மதகு அருகே 20 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசினர். இதை பார்த்த சிலர் கூச்சல் போட்டனர். அப்பகுதியில் கூட்டம் கூடியது. அப்போது விபத்தில் சிக்கிய ஒருவரை தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துவிட்டு, ஆம்புலன்ஸ் அந்தவழியாக சென்றது. கூட்டமாக இருந்ததை பார்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் டெக்னீசியன் ஆகியோர், வாகனத்தை நிறுத்தி அங்கு சென்று பார்த்தனர். டெக்னீசியன் கண்ணன் துணிச்சலுடன் அணையில் குதித்து குழந்தையை தூக்கி வந்தார். தண்ணீரை குடித்து வயிறு உப்பிய நிலையில், மூச்சு இன்றி கிடந்த குழந்தையை மற்ற டெக்னீசியன்கள் சந்திரசேகரன், சுரேந்திரன் உதவியுடன் சி.பி.ஆர்., முறையில் சுவாசத்தை கொண்டு வரவும், தண்ணீரை உறிஞ்சும் கருவியை பயன்படுத்தி தண்ணீரையும் வெளியேற்றினர். அவர்களின் முயற்சியின் பலனாக குழந்தைக்கு சுவாசம் வந்தது. முதலுதவிக்கு பின் குழந்தை சத்யா, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வைகை அணை போலீசார், குழந்தையை கொல்ல முயன்ற பெற்றோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குழந்தை தலையில் உள்ள கட்டிக்கு மருத்துவ செலவு செய்ய முடியாததாலும், நான்கு குழந்தைகளையும் படிக்க வைக்க வருமானம் இல்லாததாலும், குழந்தையை கொல்ல முயன்றதாக தெரிவித்தனர்.


No comments: