Friday, October 23, 2009

நலத்திட்ட உதவியாக இனி தையல் மெஷினுக்கு பதில் 'கிரைண்டர்கள்'


தேனி:அரசு நலத்திட்ட உதவியாக பெண்களுக்கு தையல் மெஷின்கள் வழங்கப்பட்டது மாற்றப்பட்டு இனி, "கிரைண்டர்கள்' வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக ஆண்டுதோறும் தையல் மெஷின்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாகவும் ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்படுகிறது.
தற்போது தையல் மெஷின் விலை மிகவும் அதிகரித்து விட்டதாலும், தையல் மெஷினை காட்டிலும் கிரைண்டர் வழங்கினால் அதன் மூலம் ஏழைப் பெண்கள் மாவு அரைத்துக் கொடுக்கும் தொழில் செய்ய வசதியாக இருக்கும் என்பதாலும், இனி தையல் மெஷினுக்கு பதில் கிரைண்டர் வழங்கலாமென அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப் பட்டுள்ளது. கிரைண்டர் வழங்குவதற்கு அனைத்து மாவட்ட அதிகாரிகளும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கிரைண்டர் வழங்கும் அரசின் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

No comments: