ஓசூர்: ஓசூரில், இன்டர்நெட் மூலம், நூதனமுறையில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஆன்-லைன் மார்க்கெட்டிங் நிறுவன மேலாளரை, போலீசார் கைது செய்தனர். ஐந்து பேரை தேடுகின்றனர். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ரமணராவ்.
இவருடைய நண்பர்கள் ராஜு, ஸ்ரீராம், பெங்களூரைச் சேர்ந்த ஜானகிராம், சேலத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன். இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து, "கோல்டன் ஆர்ட்ஸ்' என்ற பெயரில், நான்கு மாதமாக, ஆன்-லைன் மார்க்கெட்டிங் நிறுவனம் நடந்தி வந்தனர். இந்நிறுவனத்தின் பெயரில், அனைத்து முக்கிய நகரங்களிலும் கிளை அலுவலகங்கள் துவங்கப்பட்டன. ஓசூரில் ராயக்கோட்டை சாலையில், "கோல்டன் ஆர்ட்ஸ்' ஆன்-லைன் மார்க்கெட்டிங் நிறுவனம் உள்ளது.
இதன் கிளை மேலாளராக வசந்த் நகரைச் சேர்ந்த சசிபூஷண் உள்ளார். இந்நிறுவனம் மூலம், குறிப்பிட்ட இணையதளம் மூலம் 500 ரூபாய் முதலீடு செய்தால், மறு மாதம் முதல் 1,500 ரூபாய் வழங்கப்படும் என, விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி, ஆயிரக்கணக்கானோர், சம்பந்தப்பட்ட கிளை அலுவலகங்கள் மற்றும் ஏஜன்டுகள் மூலம், 500 ரூபாய் முதலீடு செய்தனர். ஓசூரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 500 ரூபாய் முதலீடு செய்தனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தனர்.
முதலீட்டாளர்களுக்கு, நிறுவனம் கூறியபடி பணம் வழங்கவில்லை. இதனால், முதலீட்டாளர்கள், சம்பந்தப்பட்ட கிளை அலுவலகங்கள், ஏஜன்டுகளை தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டனர். ஆனால், அவர்கள் பணம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். இந்நிலையில், ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள, "கோல்டன் ஆர்ட்ஸ்' ஆன்-லைன் மார்க்கெட்டிங் நிறுவனம், திடீரென்று மூடப்பட்டது.
அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், நேற்று முன்தினம், ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், ஆன்-லைன் மோசடி குறித்து புகார் செய்தனர். போலீசார் விசாரித்து, ஆன்-லைன் மார்க்கெட்டிங் நிறுவன மேலாளர் சசிபூஷணை கைது செய்தனர். மோசடி சம்பவம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் என்பதால், வழக்கு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவான ரமணராவ் உட்பட ஐந்து பேரை தேடுகின்றனர்.
Monday, October 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment