Monday, October 26, 2009

கடற்கரை வருபவர்களுக்கு இடையூறு கிரிக்கெட் ஆடியவர்களை விரட்டியடித்தது போலீஸ்


சென்னை, : மெரினா கடற்கரையை ரசிக்க வருபவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பல்வேறு இன்னல்களை கொடுத்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமானது மெரினா கடற்கரை. தற்போது, இதை அழகுபடுத்தும் பணி, சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையொட்டி உள்ள சாலைகள் புதுபிக்கப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள படிக்கட்டுகள் கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை, அங்கு விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாட வருபவர்கள் சேதப்படுத்தி விடுகின்றனர். மேலும், அங்கு வருபவர்கள் மீது பந்தை அடித்து, அதை எதிர்த்து கேட்பவர்களிடம் ஒன்று சேர்ந்து தகராறில் ஈடுபடுவதும், கடற்கரை ரசிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் காத்திருக்கும் நிலை நீடித்தது. இதுதொடர்பாக கமிஷனர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது.அதன் அடிப்படையில், துணை கமிஷனர் மவுரியா தலைமையிலான போலீசார், நேற்று கிரிக்கெட் வீரர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். அவர்களிடம் இருந்து கிரிக்கெட் பேட் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துணை கமிஷனர் மவுரியா கூறியதாவது: மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தினருடன் வந்து செல்வார்கள். அதற்கு இடையூறு ஏற்படுத்தும் கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் அருகில் உள்ளவர்கள் மட்டுமே வந்தனர். இப்போது, மற்ற பகுதியில் இருந்தும் வந்து விளையாடுகின்றனர். இதனால் 400க்கும் மேற்பட்டோர் பேட், ஸ்டெம்புகளுடன் கடற்கரையையொட்டி உள்ள சாலையை ஆக்ரமித்து விட்டனர்.வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதோடு, அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களின் கண்ணாடியை கிரிக்கெட் பந்தால் உடைக்கின்றனர். ஏற்கனவே, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தொல்லை கொடுப்பதுடன் வாகனங்களில் செல்பவர்களும்
பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டது. இதை தடுக்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைவரும் நேற்று எச்சரித்து அனுப்பப்பட்டனர். பறிமுதல் செய்த பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும், அங்கு விளையாட வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மவுரியா கூறினார்..

No comments: