
மும்பை: "மாதம் எட்டாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம்' என்று பொய் சொன்ன கோடீஸ்வர கணவனின் உண்மையான சொத்து விவரத்தை அவரது இ-மெயில் மூலம் கோர்ட்டில் வெளிப்படுத்தியுள்ளார் மனைவி.
மும்பை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-ரீமா தம்பதியினர். இவர்களுக்கு 2005ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ராஜேஷ் "இம்பீரியல் அகடமி' என்ற கார்கள் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவரது வருமானம் மாதம் 15 லட்ச ரூபாய். இந்தூர், மும்பை, டில்லி, துபாயில் பங்களாக்கள் இவருக்கு உண்டு. மகளின் மூன்றாவது வயதில் ரீமா, விவாகரத்து கோரி, வழக்கு தொடுத்தார்.
கோர்ட் இருவரது சம்மதத்தையும் பெற்று ஜீவனாம்சமாக, மாதம் 12 ஆயிரம் ரூபாய் ராஜேஷ் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை மறுத்து ராஜேஷ், தான் மாதம் எட்டாயிரம் மட்டுமே சம்பளம் வாங்குவதாகவும், ரீமாவுக்கு இரண்டாயிரம் தான் தரமுடியும் என்றும் வாதாடினார். இதைக் கேட்டு அதிர்ந்து போன ரீமா, தன் முன்னாள் கணவர் கோடீஸ்வரர் என்ற உண்மையை அவரது இ-மெயில் ஐ.டி., மூலம் கோர்ட்டில் நிரூபித்தார்.
ராஜேஷ் தன் இ-மெயில் ஐ.டி.,யில்,"நான் துபாய்க்கு கார்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்துகிறேன்; இந்தூர் உள்ளிட்ட நான்கு நகரங்களில் வீடுகள் உள்ளன' என்ற தகவல்களைக் கொடுத்திருந்தார். அதோடு ரீமா, 2005-06ல் ராஜேஷ் 12 லட்ச ரூபாய் வரை வரி கட்டிய சான்றையும் சமர்ப்பித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. மஜும்தார், ஆர்.வி.மோர் தங்களது தீர்ப்பில்,"ராஜேஷின் இ-மெயில் ஐ.டி., ஆதாரங்கள் அவர் போதுமான வருமானம் உள்ளவர் என்பதைக் காட்டுகின்றன.
மேலும், அவர் துபாய்க்கு விமானப் பயணம் அடிக்கடி மேற் கொண்டதும் இதை நிரூபிக்கின்றது. தவறான தகவல்களைத் தந்து அதன் மூலம் மனைவி மற்றும் மகளுக்குத் தரவேண்டிய ஜீவனாம்சத்தை குறைக்க முற்பட்டுள்ளார். இனி அவர் மாதம் 30 ஆயிரம் ரூபாய் மனைவிக்குக் கொடுக்க வேண்டும். மனைவி சீதனமாகக் கொண்டுவந்த 168 கிராம் தங்கநகைகளையும் திருப்பியளிக்க வேண்டும்,' என்று உத்தரவிட்டுள்ளனர்.
source: http://www.dinamalar.com/
No comments:
Post a Comment