Thursday, October 15, 2009

தெரசா உடலை தர முடியாது : இந்தியா திட்டவட்ட மறுப்பு


புதுடில்லி : "மறைந்த மதர் தெரசாவின் உடலை அவரது சொந்த நாடான அல்பேனியாவுக்கு அனுப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. உலக மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தெரசா, தனது கடைசிக் காலம் வரை ஏழை எளிய மக்களுக்காக பெரிதும் பாடுபட்டவர். அவர், அல்பேனியா நாட்டில் பிறந்திருந்தாலும் இந்திய மக்கள் மீது பாசம் கொண்டு இங்கு தொண்டாற்ற வந்தார். அவர் இந்தியாவுக்கு வந்த போது வயது 18. அவர், 1951ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்று, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் இருந்து சமூக தொண்டாற்றி வந்தார். அவர், 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி காலமானார்.
அவரது உடல் கோல்கட்டாவில் அவர் வாழ்ந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு இன்றும் அது புனித பூமியாக மக்களால் துதிக்கப்பட்டு வருகிறது. அவர் மறைந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், அல்பேனியா நாட்டின் அதிபர் சாலி பெரிஷ், "மதர் தெரசாவின் உடல் பாகங்களை எங்களிடம் தரவேண்டும்' என்று, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர், "மதர் தெரசாவின் தாயும், சகோதரியும் அல்பேனியாவில் தான் இறந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அருகிலேயே மதர் தெரசாவின் உடலையும் நல்லடக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு சாந்தியும் நிம்மதியும் கிடைக்கும். இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்த வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இவ்விஷயம் குறித்து மத்திய வெளியுறவு விவகார அமைச்சக அதிகாரி விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், "மதர் தெரசாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது. அவர் நித்திரை துயில்வது தனது சொந்த நாட்டில் அவரது சொந்த மண்ணில் தான். எனவே அவரது உடல் பாகங்கள் வேறு நாட்டுக்கு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று உறுதிபட தெரிவித்தார். தெரசாவின் நூறாவது பிறந்த நாள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது உடலை தங்களது நாட்டுக்கு தரவேண்டும் என அல்பேனியா நாட்டின் அதிபர் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: