
வாழ்வு தந்த கட்சியை திருநாவுக்கரசர் வசைபாட கூடாது என்று பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பா.ஜனதா துணை தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
திருநாவுக்கரசர் கடந்த 7 ஆண்டுகளாக எங்களுடன் பணியாற்றினார். பா.ஜனதாவில் இருந்த போது அவருக்கு அதிகபட்சமான மரியாதை கொடுக்கப்பட்டது. கட்சியில் சேர்ந்ததும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் எங்களை போன்றவர்களுக்கு கூட அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே கப்பல்துறை மந்திரியாக்கப்பட்டார். 2004 தேர்தலில் சில சூழ்நிலைகள் காரணமாக அவர் போட்டியிட முடியவில்லை. அப்போது அவரையும் ஒரு பெரிய தலைவராக மதித்து அவரது மனம் புண்பட கூடாது என்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி. ஆக்கப்பட்டார். 5 1/2 ஆண்டுகள் அந்த பதவியை அனுபவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. கடந்த தேர்தலில் ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டு காங்கிரஸ் பதவிக்கு வரும் சூழ்நிலை உருவானதும் பா.ஜனதாவில் இல்லை என்பது போல் தன்னை காட்டிக்கொண்டார்.
1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அவருக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. அவரது வெற்றிக்காக உழைத்த தொண்டர்களை சந்திக்கவில்லை.
இப்போது இங்கு இருப்பதை விட காங்கிரசில் இருந்தால் வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சென்றிருக்கிறார். பதவி சுகங்களை அனுபவித்து விட்டு தோல்விக்காக கட்சி மாறுவது சரியான அணுகுமுறையா? வாழ்வு தந்த கட்சியை வசை பாடலாமா?
பா.ஜனதா மதவாத கட்சி. ஆர்.எஸ்.எஸ். தலையீடு உள்ளது. சிறுபான்மையினருக்கு உதவமுடியவில்லை என்று வார்த்தைகளை அள்ளி தெளித்து இருக்கிறார். வார்த்தைகளை வெளியிடுவதற்கு முன்பு தன் மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்.
போலி மதசார்பின்மை பேசி ஓட்டுக்காக சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் கட்சிகள் அன்று முதல் இன்று வரை பா.ஜனதா மீது இதே பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இதை எல்லோரும் அறிவார்கள்.
பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது கட்சிக்கு வந்தார். அப்போது மதவாத கட்சி என்று அவருக்கு தெரிய வில்லையா?
ஆர்.எஸ்.எஸ்.சின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து பெருமை தேடி கொண்டார். அதே போல் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் நிகழ்ச்சிகளிலும் கலந்து பெருமை பெற்றார்.
குஜராத் கலவரத்தை கண்டித்ததாக கூறும் திருநாவுக்கரசர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்றது ஏன்? நரேந்திர மோடி சுற்றுப்பயணம் வரும் போதெல்லாம் அவருடன் சுற்றி கைகுலுக்கி கொண்டது ஏன்?
அவர் சென்று விட்டதால் பா.ஜனதாவே இல்லாதது போலவும், அன்னிய கட்சியாக மக்கள் பார்ப்பதாகவும் கூறும் திருநாவுக்கரசர் 7 ஆண்டுகளாக அன்னியராக இருந்தாரா?
கறவை வற்றிய மாட்டை கைகழுவும் விவசாயிபோல் திருநாவுக்கரசரும் கறவை வற்றிய மாடாக பா.ஜனதாவை நினைத்து இருக்கலாம். மீண்டும் பா.ஜனதா எழும். அப்போது மீண்டும் வரலாமா என்று யோசிப்பார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த பல கட்சி தலைவர்களும் அணி மாறியதும் பாடிய அதே பல்லவியைத்தான் திருநாவுக்கரசரும் பாடியிருக்கிறார்.
7 ஆண்டுகள் பழகிய நட்பின் காரணமாக சொல்கிறோம். கட்சியை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது.
திருநாவுக்கரசர் மனப்பூர்வமாக இந்த கருத்துக்களை வெளியிட்டாரா? என்பதை நம்ப முடியவில்லை.
இது காங்கிரசின் அறிக்கையாக இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கிறோம். காங்கிரசில் இணைந்துள்ள அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் அமைய எனது நல் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment