Tuesday, November 3, 2009

பூகம்ப அபாயம்: ஈரானின் தலைநகரம் மாறுகிறது


தற்போது ஈரான் நாட்டின் தலைநகரமாக தெக்ரான் உள்ளது. இந்நகரத்துக்கு பூகம்ப அபாயம் இருப்பதாக பூகம்ப ஆய்வியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பூகம்பம் ஏற்படும் நிலையில் கடுமையான உயிர் சேதமும், பொருட்சேதமும் உண்டாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் ஏற்படும் பட்சத்தில் இந்த சேதத்தை தடுப்பது எப்படி என்று ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் ஈரான் தலைநகரத்தை தெக்ரானில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதற்கான முடிவை ஈரானின் தலைவர் அயா தொல்லா அலி காமெனி தலைமையிலான கவுன்சில் எடுத்துள்ளது.

இதற்கான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. ஈரானின் வரலாற்றில் இஸ்பகான், குவாஷ்வின், ஷிராஷ், மஷாத், ஹேமெடன் போன்றவை தலைநகரங்களாக இருந்துள்ளன.

குஜார் இனத்தைச் சேர்ந்த அகாமுகமதுகான் அரசராக இருந்தபோது கடந்த 1796-ம் ஆண்டு தெக்ரானை தலைநகராக அறிவித்தார். அதில் இருந்து அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாசார நகரமாக தெக்ரான் விளங்கி வருகிறது. இங்கு 1 கோடியே 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

இதற்கிடையே கடந்த 2003-ம் ஆண்டில் பாம் நகரில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 40 ஆயிரம் பேர் பலியானார்கள். அங்கு ஏற்பட்ட பூகம்பம் தெக்ரானையும் தாக்கும் அபாயம் இருப்பதாக கருதப்பட்டது. எனவே தலைநகரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் பூகம்பம் அபாயம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஈரானின் தலைநகரத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

No comments: