
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி முதுகோடா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. அன்னிய செலாவணி மோசடி செய்தும் சொத்துக்களை வாங்கி குவித்து இருந்தார்.இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்க பிரிவினர் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்வேறு இடங்களில் சோதனையும் நடந்து வருகிறது.
மதுகோடாவுக்கு டெல்லி, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர் சாய்பசா, பாட்னா, ராஞ்சி, லக்னோ, காசியாபாத் ஆகிய நகரங்களில் 70 இடங்களில் சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து உள்ளது. நேற்று ஜாம்ஷெட்பூர், ராஞ்சியில் 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
மதுகோடா இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதை அமலாக்க பிரிவு கண்டுபிடித்தது.
ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. தாய்லாந்தில் ஓட்டல் ஒன்று இருக்கிறது. இவை தவிர ஐக்கிய அரபுநாடு, சிங்கப்பூர், துபாய், மலேசியா, இந்தோனேசியா ஆகிய இடங்களிலும் சொத்துக்கள் உள்ளன. இவற்றை ஹவாலா பணம் மோசடி மூலமே வாங்கி இருக்கிறார்.
வெளிநாட்டில் மட்டும் ரூ.2500 கோடிக்கு சொத்து வாங்கி உள்ளார். மொத்தத்தில் ரூ.4 ஆயிரம் கோடி சொத்துக்களை குவித்து உள்ளார்.
இது ஜார்க்கண்ட் மாநில பட்ஜெட்டில் 5-ல் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் மதுகோடா இரும்பு வெல்டிங் தொழில் செய்யும் சாதாரண தொழிலாளியாக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
2005-ல் தனது 35-வது வயதில் அவர் முதல்- மந்திரி ஆனார். அப்போது தனக்கு ரூ.12 லட்சம் சொத்து இருப்பதாக தேர்தல் கமிஷனிடம் கணக்கு காட்டி இருந்தார். அதன் பிறகுதான் இவ்வளவு சொத்துக்களை குவித்து இருக்கிறார்.
பல சொத்துக்களை அவருக்கு நெருக்கமான 6 பேர் பெயரில் வாங்கி உள்ளார். அதில் வினோத் சின்கா, சஞ்சய் சவுத்திரி ஆகியோர் பெயரில்தான் அதிக சொத்துக்கள் வாங்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் இப்போது அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மதுகோடாவிடம் வருமான வரி, அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஆனால் மதுகோடா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: http://www.maalaimalar.com/
No comments:
Post a Comment