Monday, February 1, 2010

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு: ஷாருக்கான் வீட்டுமுன்பு சிவசேனா ஆர்ப்பாட்டம்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை யாரும் ஏலம் எடுக்கவில்லை. ஆனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான், “பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அணியில் சேர்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக சில கருத்துக்களையும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. ஷாருக்கானுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் சிவசேனா கட்சி தொண்டர்கள் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஷாருக்கானுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ஷாருக்கான் மும்பையில் இருந்து பாகிஸ்தான் செல்வதற்கான மாதிரி விமான டிக்கெட்டுகளை பலர் கையில் வைத்துக்கொண்டு, “ஷாருக்கானே பாகிஸ்தானுக்கு” போ” என்று குரல் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் குறித்து சிவசேனா கட்சியினர் கூறும்போது, பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதென்றால் ஷாருக்கான் பாகிஸ்தானுக்கே போய்விடலாம். இந்தியாவில் அவருக்கு வேலை இல்லை. “கான்” என்ற பெயரில் அவர் நடித்து வெளிவர இருக்கும் படத்தை தடைசெய்ய வேண்டும்.

இது தேசப்பற்று தொடர்பான விஷயம். மும்பையில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஷாருக்கான் இதுவரை மராட்டியர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை ஆனால் பாகிஸ்தான்காரர்களை ஆதரித்து பேசுகிறார்” என்று குற்றம்சாட்டினார்கள்.

மும்பை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஷாருக்கானின் பேனர்களையும் சிவசேனா கட்சியினர் கிழித்து எறிந்தனர். தீ வைத்தும் கொளுத்தினார்கள். அமீர்கானையும் சிவசேனா கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து ஷாருக்கான் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments: