
பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட புத்தக பைகளை சுமந்து செல்வது தொடர்பாக, மங்களூரில் உள்ள சில பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மாணவர்கள் அதிக பளுவை சுமப்பதால், கழுத்து வலி, கை, கால் வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்துமென அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுவாக, மாணவர்கள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்கு தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவர்கள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர். இதன் காரணமாக, ஆரோக்கியமாக உள்ள 10 முதல் 30 சதவீத மாணவர்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. மும்பை, டில்லி, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான பிள்ளைகள் பளுவான புத்தக மூட்டையை சுமப்பதன் மூலம் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகின்றனர். புத்தகப்பை மட்டுல்லாது, விளையாட்டு பொருட்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றையும் பள்ளிக்கு சுமந்து வர வேண்டியுள்ளது. இதனால், அவர்களுக்கு சுமை அதிகரிப்பதுடன், கை, கால்களில் எலும்பு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுகிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டில்லியை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் சமீர் கூறியதாவது: பள்ளி பிள்ளைகள் அதிக எடை சுமப்பதால், அவர்களுக்கு உடல் உபாதைகள் மட்டுமல்லாது, மனம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதனால், அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. கை, கால் வலி, முதுகு வலி, தலை வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும், பிள்ளைகள் அதிக எடை சுமப்பதால், அவர்களின் எலும்பு வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால், முதுகு கூன் விழுவது உள்ளிட்ட உடல் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு சமீர் கூறினார்.
இந்த பிரச்னை குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: கல்வி கற்பிக்கும் முறையும் தற்போது நவீனமயமாகி வருகிறது. நகரங்களில் உள்ள பெரிய பள்ளிகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மாணவர்களின் புத்தக சுமையை பெருமளவு குறைக்க வாய்ப்பு உள்ளது. பாட புத்தகங்களின் எண்ணிக்கையை குறைத்து, "சிடி', யு.எஸ்.பி., பிளாஷ் டிரைவ்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இதற்கு வாய்ப்பில்லாத பள்ளிகளில், லாக்கர் சிஸ்டத்தை அமல்படுத்தலாம். அதாவது, மாணவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை பள்ளியிலேயே தங்களுக்கான லாக்கர்களில் வைத்து விட்டு செல்லாம். மேலும், அன்றைய கால அட்டவணைக்கு ஏற்ற பாடப்புத்தகங்களை மட்டும் எடுத்து வரலாம். இதனால், மாணவர்களின் புத்தகச்சுமை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. மேலும், பாடத்திட்டத்தில் அளவை குறைப்பதன் மூலம் புத்தகச் சுமையை ஓரளவுக்கு குறைக்க முடியும். இது குறித்து, பல்வேறு தரப்பினரும் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment